மேனகா காந்தியிடம் பாடகி சின்மயி புகார்


மேனகா காந்தியிடம் பாடகி சின்மயி புகார்
x
தினத்தந்தி 1 March 2019 4:45 AM IST (Updated: 1 March 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

பாடகி சின்மயி டுவிட்டரில் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறி வந்தார். பாதிக்கப்பட்டதாக கூறும் பெண்கள் விவரங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தார்.

சின்மயிக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த நிலையில் தமிழ் சினிமா டப்பிங் யூனியனில் இருந்து தன்னிடம் விளக்கம் கேட்காமல் நீக்கி விட்டதாக சின்மயி புகார் கூறினார்.

2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் கட்டணம் செலுத்தாததால் அவர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. முன்னணி நடிகைகள் பலருக்கு குரல் கொடுத்து வந்த சின்மயி, 96 படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். டப்பிங் யூனியனில் இருந்து நீக்கிய பிறகு நடிகைகளுக்கு குரல் கொடுக்க யாரும் அவரை அழைக்கவில்லை.

இதுகுறித்து மத்திய மந்திரி மேனகா காந்திக்கு சின்மயி புகார் அனுப்பி உள்ளார். “நான் குற்றச்சாட்டுகள் கூறிய பிறகு டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டேன். டப்பிங் யூனியன் தடை விதித்து இருப்பதால் சினிமா துறையில் பணியாற்ற முடியவில்லை. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்சினையை தேசிய மகளிர் ஆணையத்துக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுப்பதாக சின்மயிக்கு மேனகா காந்தி உறுதி அளித்துள்ளார்.

Next Story