பழம்பெரும் நாடக மற்றும் திரைப்பட நடிகரான டைப்பிஸ்ட் கோபு மறைவு; முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்


பழம்பெரும் நாடக மற்றும் திரைப்பட நடிகரான டைப்பிஸ்ட் கோபு மறைவு; முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
x
தினத்தந்தி 7 March 2019 11:32 AM GMT (Updated: 7 March 2019 11:32 AM GMT)

பழம்பெரும் நாடக மற்றும் திரைப்பட நடிகரான டைப்பிஸ்ட் கோபு மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருச்சி மணக்கல் பகுதியை சேர்ந்தவர் கோபால ரத்தினம்.  கல்லூரி படிக்கும்பொழுதில் இருந்து நாடகங்களில் நடிக்க தொடங்கிய இவர், கடந்த 1955ம் ஆண்டு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேஷ் நாடக குழுவில் நடிக்க தொடங்கினார்.

இதன்பின் கடந்த 1959ம் ஆண்டு நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், பின்னர் டைப்பிஸ்ட் கோபு என அழைக்கப்பட்டார்.  நடிகர், எழுத்தாளர் சோ மற்றும் ஒய்.ஜி. மகேந்திரனின் ஒருங்கிணைந்த அமெச்சூர் கலைஞர்களுக்கான நாடக குழு ஆகியவற்றில் நடித்து புகழ்பெற்றார்.

இதனை தொடர்ந்து கடந்த 1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.

அவர் தொடர்ந்து, அதே கண்கள், எங்க மாமா, அதிகாரி, ருத்ரா, மைக்கேல் மதனகாமராஜன் உள்ளிட்ட 400க்கும் அதிகமான திரைப்படங்கள், 600க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். டைப்பிஸ்ட் கோபு எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் தொடங்கி தற்போதிருக்கும் விஜய், அஜித் வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பொருளாதாரரீதியாக அவதிப்பட்ட இவர் சென்னை அம்பத்தூரில் மனைவி, மகனுடன் சிறிய வீட்டில் வசித்து வந்து உள்ளார்.  இந்நிலையில், சில சினிமா நட்சத்திரங்கள் இவருக்கு பண உதவிகள் செய்துள்ளனர்.

உடல்நல குறைவால் அவதிப்பட்டுவந்த இவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.  இவரது மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Next Story