“ஒளிப்பதிவாளரான என்னை நடிகை ஆக்கினார்” - நடிகை சுஹாசினி


“ஒளிப்பதிவாளரான என்னை நடிகை ஆக்கினார்” - நடிகை சுஹாசினி
x
தினத்தந்தி 4 April 2019 4:48 AM GMT (Updated: 4 April 2019 4:48 AM GMT)

டைரக்டர் மகேந்திரன் ஒரு மாமனிதர். நான் அவரை முதல் முதலாக சந்தித்தபோது எனக்கு 17 வயது.

பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு துறையில் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தேன். அப்போது அருணாச்சலம் ஸ்டூடியோவில் உதிரிப்பூக்கள் பட சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. ஒளிப்பதிவை நேரில் காணும் பொருட்டு அப்பா என்னை அங்கே அழைத்துச் சென்றார்.

டைரக்டர் மகேந்திரன் என்னைப் பார்த்து என்ன படிக்கிறாய் என்று கேட்டார். நான் சொன்னதும் சந்தோஷப்பட்டார். அவ்வப்போது கல்லூரியில் அனுமதி கேட்டு இங்கே வந்து ‘லைட்டிங்’ பண்ணு என்று ஒரு நல்லாசிரியர் ஸ்தானத்தில் இருந்து கூறினார். அதன்படியே நானும் ஒளிப்பதிவு பயிற்சியை மேற்கொண்டேன்.

அடிக்கடி என்னிடம் ஆலோசனை கூறுவார். திடீரென்று அவருக்கு என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தலாமே என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது. ஜானி பட சூட்டிங் நடந்தபோது நான் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அப்போது எனக்கு தெரியாமலேயே என்னை பல கோணங்களில் படம் (‘ஸ்டில்’) எடுத்து பார்த்து இருக்கிறார். நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் நடிப்பதாக இருந்த நடிகை பத்மினி கோலாபுரி தவிர்க்க முடியாத காரணத்தால் நடிக்க முடியவில்லை.

அந்தப்படத்தில் என்னை நடிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதுகுறித்து கமலிடம் ஆலோசனை கேட்டேன் அதற்கு அவர் நீ சின்னப் பொண்ணு. நீ நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் நடிக்கலாம் என்று கூறினார். அதன்படி நடிப்பதென்று முடிவு செய்தேன். என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

சென்னையில் இருந்து மும்பைக்கு என்னை டைரக்டர் மகேந்திரன் விமானத்தில் அழைத்துச் சென்றார். அதுதான் எனது முதல் விமானப் பயணம். என் அருகிலேயே அவர் அமர்ந்து கொண்டு நீ கேமரா பின்னால் போக வேண்டாம். முன்புறம் நின்று நடிக்கலாம். பயப்பட வேண்டாம் என்று கூறி ஊக்கமளித்தார். அவரது மனைவியிடம் இவளுக்கு புத்திமதி கூறு என்று கூறினார். இப்படியாக நடித்த நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றது.

1 வருடம் வரை ஓடியது. அந்தப் படத்திற்காக எனக்கு மாநில விருது கிடைத்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கரத்தால் விருதினை பெற்றேன். அப்போது வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமல்ஹாசனும் விருது பெற்றார். ஒரே நேரத்தில் இருவரும் விருது பெற்றது வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான சம்பவமாகும்.

எனது முதல் படத்தை பார்த்து விட்டு டைரக்டர் மகேந்திரன் உனக்கு விரைவில் தேசிய விருது கிடைக்கும். அதை நான் பார்க்கத்தான் போகிறேன் என்று கூறுவார்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை தொடர்ந்து அவரது டைரக்‌ஷனில் ‘அழகிய கண்ணே’ படத்தில் நடித்தேன். தொடர்ந்து அவரது டைரக்‌ஷனில் 1, 2, 3, 4 படத்தை நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படத்தை தொடர்ந்து எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதுதான் வருத்தம். அவரைப் போன்ற ஒரு டைரக்டரை பார்க்க முடியாது.

இளைஞர்களின் யதார்த்த வாழ்க்கையை இன்று டைரக்டர்கள் ரஞ்சித், வெற்றிமாறன் பிரதிபலிப்பதை போல அப்போதே டைரக்டர் மகேந்திரன் செய்து காட்டி விட்டார். மகேந்திரன் சார் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். அவர் ரஜினிக்கும், மற்ற நடிகைகளுக்கும், எல்லோருக்கும் கதை சொல்லி படம் எடுப்பார். அவர் தலைமுறையை தாண்டிய ஞானி. அவர் வெளிநாட்டுக்கு சென்றதில்லை. ஆனால் சின்ன வயதில் இருந்தே உலக அறிவு நிரம்ப பெற்றவர்.

அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது அறிவை வளர்த்துக் கொண்டார். தன்னைப் பற்றி பேசமாட்டார். சத்ய ஜித்ரே போன்ற பிரபலமானவர்களை பற்றியே பேசுவார். டைரக்டர் மகேந்திரன் டைரக்‌ஷனில் வெளியான உதிரிப்பூக்கள், ஞானி, காளி, நண்டு, மெட்டி ஆகிய படங்களில் நான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறேன். கமல் நடித்த மீண்டும் கோகிலா, ஆடுபுலி ஆட்டம் படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். யாராலும் காபி அடிக்க முடியாத யதார்த்த நிலையில் உலகதரமான சினிமாவை கொண்டு வந்தார். பெண்கள் கதாபாத்திரத்துக்கு நன்கு முக்கியத்துவம் கொடுப்பார்.


Next Story