போனிகபூர் அழைப்பு : இந்தி படத்தில் அஜித்குமார்?
அஜித்குமார் ‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடிக்கிறார்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வினோத் டைரக்டு செய்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இதில் அஜித் ஜோடியாக வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
அஜித்குமார் வக்கீலாக வருகிறார். பிரச்சினையில் சிக்கி கொலை மிரட்டல்கள், பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் 3 பெண்களுக்கு ஆதரவாக அஜித் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வாதாடி நியாயம் கிடைக்க செய்வதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் சென்னையில் தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து படப் பிடிப்பை நடத்தினர். தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஆகஸ்டு 10-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இந்தி படத்தில் நடிக்க அஜித்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், “நேர்கொண்ட பார்வை படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. நடிப்பில் அஜித் பிரமாதமாக மிரட்டி இருந்தார். விரைவில் இந்தி படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன். என்னிடம் 3 அதிரடி கதைகள் உள்ளன. அதில் ஒரு கதையில் அவர் நடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story