எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்த வசனங்கள்


எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்த வசனங்கள்
x
தினத்தந்தி 12 April 2019 12:54 PM IST (Updated: 12 April 2019 12:54 PM IST)
t-max-icont-min-icon

சிறப்புமிக்க பாடலாசிரியர், கவியரசு கண்ணதாசன்

காலத்தை வென்று நிற்கும் பல பாடல்கள் மூலம், தமிழ் திரைப்பட உலகில் அன்றும், இன்றும் கோலோச்சிக்கொண்டு இருக்கும் சிறப்பு மிக்க பாடலாசிரியர், கவியரசு கண்ணதாசன். காலத்தால் அழியாத பாடல்களை உருவாக்கிய அவரது வாழ்க்கையில் நடந்த சுவையான விஷயங்கள், பாடல்கள் உருவாக்கும்போது நடைபெற்ற சுவாரசியங்கள், பாடல்கள் உருவான அற்புத தருணங்கள் உள்பட பல்வேறு இனிய நிகழ்வுகளை, இந்தத் தொடரில் அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் சுவைபட எழுதுகிறார்.

டெலிபோன் மணி ஒலிக்கிறது. வேகமாக சென்று எடுக்கிறேன். மறுமுனையில் இருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. “நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். கவிஞர் இருக்கிறாரா?” ஒரு கணம் வானத்தில் பறப்பது போல உணர்வு.

படம் ரிலீஸ் ஆன உடன் முதல் நாளே போய், கை தட்டி.. விசில் அடித்து.. படத்தில் பார்த்த, தியேட்டரில் கேட்ட அதே குரல். வார்த்தைகள் தொண்டைக் குழியில் சிக்கிக்கொண்டு வர மறுக்கின்றன.

மீண்டும் அவர், “நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். கவிஞர் இருக்கிறாரா?” என்று கேட்டவுடன் தன் நிலைக்கு வந்து, “அப்பா வெளியே போய் இருக்காங்க” என்று சொல்கிறேன். “சரி நான் பேசிக்கொள்கிறேன்” என்று சொல்லி விட்டு போனை கட் செய்கிறார்.

ஒரு முதலமைச்சர் தன் உதவியாளரிடம், ‘கவிஞருக்கு போன் போட்டுத்தா’ என்று சொல்லி இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர்., அப்பாவுக்கு போன் செய்யும் போதெல்லாம் அவரே தான் நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவார்.

அப்பா போனில் பேசும் போது, ‘டேய்’ என்று உரிமையாக பேசினால் அது எம்.எஸ்.விஸ்வநாதன். ‘முதலாளி’ என்று பேசினால் அது சிவகாசி ராஜசபை, அல்லது யாசின் பாய். “ஆண்டவனே” என்று பேசினால் அது எம்.ஜி.ஆர். அப்பாவும் அவரை, ‘ஆண்டவனே’ என்று தான் அழைப்பார்.

அப்பாவின் எழுத்து திறமை மீது எம்.ஜி.ஆர். மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார். “கண்ணதாசன் என்ற கவிஞர் பேசப்படுவது போன்று, கண்ணதாசன் என்ற வசனகர்த்தாவும் பேசப்பட்டிருக்க வேண்டும். பாடல்களில் செலுத்திய அதே கவனத்தையும், உழைப்பையும் வசனம் எழுதுவதில் அவர் செலுத்தி இருந்தால், இளங்கோவனுக்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட வசனகர்த்தாவாக அவர் இருந்திருப்பார்” என்று எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்லி இருக்கிறார்.

‘மதுரைவீரன்’, ‘மகாதேவி’, ‘மன்னாதி மன்னன்’, ‘நாடோடி மன்னன்’ என்று எம்.ஜி.ஆர். படங்களில், அப்பா எழுதிய வசனம் அன்று பரபரப்பாக பேசப்பட்டது.

‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தொடங்கி, எம்.ஜி.ஆரே இயக்கி நடித்தார். தன் சொத்துக்களை அடமானம் வைத்து அந்தப் படத்தை தயாரித்தார்.

“இந்தப் படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நான் நாடோடி” என்று அவரே சொல்லி இருந்தார்.

‘மகாதேவி’, ‘மதுரைவீரன்’ படங்களின் வெற்றிக்கு கண்ணதாசனின் வசனங்களும் ஒரு காரணம் என்பதை எம்.ஜி.ஆர். உணர்ந்திருந்ததால், தனது ‘நாடோடி மன்னன்’ படத்திற்கும் கண்ணதாசன் தான் வசனம் எழுத வேண்டும் என்று விரும்பி அப்பாவை ஒப்பந்தம் செய்தார்.

அந்த காலகட்டத்தில் அப்பாவுக்கு சொந்தப்படம் காரணமாகவும், அரசியல் காரணமாகவும் பல பிரச்சினைகள். அதனால் ‘நாடோடி மன்னன்’ படத்துக்கான வசனங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு போன் செய்து அவரை சந்தித்து பேச நேரம் கேட்டார். அவரும், “உடனே வாருங்கள்” என்று சொல்லிவிட்டார்.

எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு போனார் அப்பா. “வாங்க ஆண்டவனே என்ன விஷயம்?” “இல்ல ஆண்டவனே. அது வந்து…” என்று அப்பா தயக்கமாக பேசுகிறார்.

அப்பா ஏதோ மனநிலையில் இருக்கிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., “சரி.. முதல்ல சாப்பிடுவோம். அப்புறம் பேசலாம்” என்கிறார். இருவரும் சாப்பிடுகின்றனர்.

சாப்பிட்டு முடிந்தபின், ‘இப்ப சொல்லுங்கள்’ என்று எம்.ஜி.ஆர். கேட்க... “ஆண்டவனே, எனக்கு இப்ப நிறைய பிரச்சினைகள் இருக்கு” “பணப் பிரச்சினைனா கவலைப்படாதீங்க, நான் தரேன்”

“இல்லை ஆண்டவனே, எழுத்தில் முழு கவனமும் செலுத்த முடியாத அளவுக்கு வேற வேற பிரச்சினைகள். நீங்க உங்க வாழ்க்கையை ரிஸ்க் எடுத்து இந்த படத்தை ஆரம்பிச்சு இருக்கீங்க. இந்தப் படத்துக்கு வசனம் பக்கபலமா இருக்கணும்னு சொல்லி இருக்கீங்க. என்னுடைய பிரச்சினைகளால் உங்களை பிரச்சினைக்கு உள்ளாக்க விரும்பல. இந்தப் படம் வெற்றி பெற்று நீங்க மன்னனா இருக்கணும்னு ஆசைப்படுறேன். அதனால இந்தப் படத்துக்கு மட்டும் நீங்க வேற யாரையாவது வசனம் எழுத சொல்லுங்க”.

எம்.ஜி.ஆர் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. எழுந்து சிந்தனையுடன் மேலும் கீழுமாக நடக்கிறார். பின் திரும்பி வந்து அப்பாவின் அருகில் அமர்ந்து, “நீங்க எதுக்காக சொல்றீங்கனு எனக்கு தெரியுது. ஏனோ தானோனு எழுதித் தராம, முடியாதுனு சொன்னதே உங்க மனசை காட்டுது. எனக்காக ஒரு உதவி செய்யணும்...”.

“என்ன உதவி?”

“இந்தப் படத்துக்கு உயிர்நாடினு சில காட்சிகளை உருவாக்கி வச்சிருக்கேன். அந்த பதினைந்து காட்சிகளுக்கு மட்டும் நீங்க வசனம் எழுதித்தாங்க. மற்ற வசனங்களை நான் ரவீந்தரை வச்சு எழுதிக்கிறேன்.” அப்பாவும் அதை ஏற்றுக்கொண்டு அந்த பதினைந்து காட்சிகளுக்கு வசனம் எழுதித் தந்தார்.

“நான் சாதாரண குடியில் பிறந்தவன், பலமில்லாத மாடு, உழ முடியாத கலப்பை, அதிகாரம் இல்லாத பதவி, இவைகளை நாங்கள் விரும்புவதேயில்லை”.

“மக்களின் நிலையறியாதவன் நானா?, நீங்களா?. நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கின்றவன்.”

“என் உருவம் மாறி இருக்கிறது. என் உள்ளம் மாறவில்லை.” “அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள்.” “தவறு, பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்க மாட்டார்கள்.” “என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு, நம்பிக்கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.”

படத்தில் இடம்பெற்ற அப்பாவின் வசனங்களில் சில துளிகள் இவை. அப்பா எழுதித்தந்த பதினைந்து காட்சிகளையும் அப்படியே மனப்பாடமாக எம்.ஜி.ஆர். சொல்லுவார்.

1979-ம் ஆண்டு எம்.ஜி.ஆரைப் பார்க்க, ஆற்காடு சாலையில் இருந்த அவரது அலுவலகத்திற்கு அப்பா சென்றார். அவருடன் நானும் சென்றேன்.

நான் அப்போது புதுக்கல்லூரியில் மாணவர் பேரவையின் ஸ்போர்ட்ஸ் செக்கரட்டரியாக இருந்தேன். நாங்கள் அனைவரும், புதிதாக தொடங்கப்பட்ட அண்ணா தி.மு.க.வின் ஆதரவாளர்கள்.

அப்பாவைப் பார்த்ததும் “வாங்க ஆண்டவனே” என்று சொல்லி, இருவரும் தனியே சென்று பேசினார்கள். பின்னர் அப்பா என்னை அறிமுகப்படுத்தினார். நான் எங்கள் கல்லூரி மாணவர் பேரவையை பற்றிச் சொன்னேன்.

“நீ கட்சியில் உறுப்பினர் ஆகிவிட்டாயா?” என்று கேட்டார். ‘இல்லை’ என்றேன். பின்னர் இன்டர்காமில் தன் உதவியாளர் முத்து என்பவரை அழைத்து, உறுப்பினர் படிவத்தை கொண்டுவரச் செய்து அவரே கையெழுத்திட்டு, என்னை அ.இ.அ.தி.மு.க.வின் உறுப்பினராக ஆக்கினார்.

வேடிக்கை என்னவென்றால் அவரது ஆட்சியில் அரசவைக் கவிஞராக இருந்த அப்பா, அவரது கட்சியில் உறுப்பினராக ஆகவேயில்லை. எம்.ஜி.ஆரும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை.


Next Story