பெண்களின் பொய்யான செக்ஸ் புகாரில் இருந்து ஆண்களை பாதுகாக்க "மென் டூ" இயக்கம்


பெண்களின் பொய்யான செக்ஸ் புகாரில் இருந்து ஆண்களை பாதுகாக்க மென் டூ இயக்கம்
x
தினத்தந்தி 9 May 2019 1:30 PM IST (Updated: 9 May 2019 7:03 PM IST)
t-max-icont-min-icon

ஆண்களுக்கு எதிராக பழி தீர்ப்பதற்காக, பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறி "மென் டூ" என்ற இயக்கத்தை, சமீபத்தில் பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள் துவங்கியுள்ளனர். #mentoo

மும்பை,

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை மிரள வைத்த இந்த ‘மீ டூ’ இயக்கம் இந்தி பட உலகை உலுக்கி விட்டு இப்போது தமிழகத்திலும் ஊடுருவி உள்ளது.

பாலியல் ஆசாமிகளை அலற வைக்கும் இந்த ‘மீ டூ’ 2006-ம் ஆண்டிலேயே உதயமாகி விட்டது.

தரானா புர்க் என்ற மனித உரிமை ஆர்வலர் இதை தொடங்கினார். அப்போது பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் இதன்மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டன. 2017-ல் ஹாலிவுட்டுக்குள் இது நுழைந்த பிறகுதான் உலக அளவில் பிரபலத்துக்கு வந்தது.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெய்ன் மீது 80-க்கும் மேற்பட்ட நடிகைகள் பாலியல் புகார் கிளப்பினார்கள். பல வருடங்களாக நடந்த அவரது பாலியல் அட்டூழியங்களை துணிச்சலாக பேச ஆரம்பித்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக ஹாலிவுட் நடிகை அலிசா மிலானே தனக்கு தெரிந்த பெண்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகளை கடந்த வருடம் அக்டோபர் 15-ந்தேதி ‘மீ டூ’வில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

அதன்பிறகுதான் ‘மீ டூ’ பெண்கள் மத்தியில் தீயாக பரவியது.

அமெரிக்கா முழுவதும் இந்த ‘ஹேஷ் டேக்’ வைரலாகி ஹாலிவுட் நடிகர்கள், இயக்குனர்களின் குற்றங்களை தோலுரித்து காட்டின.

அரசியல்வாதிகள், அலுவலகங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகளையும் இது விட்டு வைக்கவில்லை. ஆஸ்கார், கோல்டன் குளோப் விருதுகள் விழாவிலும் ‘மீ டு’ பற்றி பேசினார்கள்.

இப்போது இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள பட உலகில் சூறாவளியாக சுழன்று பிரபலங்களை நிலைகுலையச் செய்து வருகிறது.

தமிழ் பட உலகில் முதலில் சுசிலீக்ஸ் முகநூல் பக்கம்தான் திரையுலகினரின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தியது. முன்னணி நடிகர், நடிகைகள் இதில் சிக்கினார்கள்.

அதன்பிறகு தெலுங்கு பட உலகில் நடிகை ஸ்ரீ ரெட்டி, விஸ்வரூபம் எடுத்து பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களை சந்திக்கு இழுத்தார்.

இப்போது தீராத விளையாட்டு பிள்ளை படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மூலம் இந்தியா முழுவதையும் ‘மீ டூ’ உலுக்கி வருகிறது.

தனுஸ்ரீ தத்தா பாலியல் புகாரில் சிக்கிய நானா படேகர் சாதாரணமானவர் அல்ல. தேசிய விருதுகள் பெற்று இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகர். ‘காலா’, ‘பொம்மலாட்டம்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

‘மீ டூ’    மூலம் தமிழகத்திலும் சில நடிகர்கள் பாதிக்கப்பட்டனர். ‘மீ டூ’ இயக்கம் தங்களுக்கு வேண்டாதவர்களை சிக்கலில் மாட்ட வைத்து அசிங்கப்படுத்தும் ஒரு தளமாக இருக்கிறது என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது.

நடிகர் கரண் ஓபராய் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து, அவரது நண்பர்கள் சிலர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் புகார் அளித்த பெண்ணும் தங்கள் நண்பரும் காதலித்து வந்ததாகவும், இருவரும் பிரிந்த நிலையில் தற்போது பொய்ப்புகார் அளித்துள்ளதாகவும் கூறினர்.

மேலும் சமீப காலமாக ஆண்களுக்கு எதிராக போலி பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதுபோன்ற போலி வழக்குகள் சிலவற்றில் உயர்நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டினர். போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்தி, சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் "மென் டூ" இயக்கத்தை தொடங்கிய அக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story