என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்? -எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
பிரியா பவானி சங்கர் என்னுடன் நடிக்க பயந்தது ஏன்? என்று எஸ்.ஜே.சூர்யா விளக்கமளித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி வருமாறு:-
எனக்கும் ஒரு எலிக்கும் நடக்கும் போராட்டமே ‘மான்ஸ்டர்’ கதை. பெரும்பகுதியான காட்சிகள் எலியை மையப்படுத்தியே இருக்கும். கிராபிக்ஸ் எலியை பயன்படுத்தாமல் நிஜ எலியை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். அஞ்சனம் அழகிய பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் ஈ, எறும்புக்கும் பாவம் நினைக்காத வள்ளலார் பக்தராக நான் நடித்துள்ளேன்.
எனது காதலுக்கு எலி எப்படி வில்லனாகிறது என்பது படம். என்னுடன் நடிக்க பயந்ததாக பிரியா பவானி சங்கர் சொன்னதை வைத்து என்னுடன் ஜோடி சேர கதாநாயகிகள் தயங்குகிறார்களா? என்று கேட்கின்றனர். பிரியா பவானி சங்கர் மாணவியாக இருந்தபோது நான் நடித்த நியூ உள்ளிட்ட படங்களை பார்த்து இருப்பார். அந்த எண்ணத்தில் குடும்பத்து குத்து விளக்காக நடிக்கும் நான் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிப்பது சரியாக இருக்குமா என்று தயங்கி இருக்கலாம்.
சிம்ரன், நிலாவுக்கு பிறகு எனக்கு பொருத்தமான ஜோடியாக அவர் இருந்தார். எனது முந்தைய படங்களைப்போல் இந்த படம் கவர்ச்சியாக இருக்காது. மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லனாக நடித்தேன். அதுபோன்ற வலுவான கதைகள் வந்தால் வில்லனாக நடிப்பேன். 2 ஆண்டுகளில் கதை பிடிக்காமல் 10-க்கும் மேற்பட்ட வில்லன் வேடங்களை தவிர்த்து இருக்கிறேன். குஷி, வாலி படங்களின் 2-ம் பாகம் எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.”
இவ்வாறு எஸ்.ஜே சூர்யா கூறினார்.
Related Tags :
Next Story