என்றென்றும் கண்ணதாசன் : வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உறவு


என்றென்றும் கண்ணதாசன் : வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உறவு
x
தினத்தந்தி 10 Aug 2019 7:06 PM IST (Updated: 10 Aug 2019 7:06 PM IST)
t-max-icont-min-icon

அண்ணாவுக்கும் அப்பாவுக்குமான தொடர்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அதை அன்பு, பாசம், நட்பு என்று வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாது. அவரைப் போல் அண்ணாவை புகழ்ந்தவர்களும் கிடையாது; இகழ்ந்தவர்களும் கிடையாது.

‘கண்ணதாசன் திட்டுவது உதட்டளவில்தான். உள் மனதில் இருக்கும் அன்பு எள்ளளவும் குறையவில்லை’ என்பது அண்ணாவுக்குத் தெரியும். அண்ணாவின் மரணத்தின் போது அப்பா அழுது புலம்பி எழுதிய கடிதங்களே அதற்கு சாட்சி.

அப்பா மிகவும் நேசித்த ஜெயகாந்தன் கூட, “கண்ணதாசனின் அந்த அழுகையும், அண்ணா மரணத்தை தொடர்ந்து அவர் எழுதிய கடிதங்களும் தனக்கு உடன்பாடில்லாத ஒன்று” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

எனக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்ததை முன்பே சொல்லி இருக்கிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயம். தி.மு.க.வில் இருந்து ஈ.வி.கே.சம்பத்தும் அப்பாவும் ‘தமிழ் தேசிய கட்சி’ என்ற புது கட்சியைத் தொடங்கி, அந்தக் கட்சியில் பல திராவிட இயக்க தொண்டர்கள் சேர்ந்து ஓரளவுக்கு வலுவான நிலையில் இருந்தது. ஈ.வி.கே.சம்பத்துக்கும் அப்பாவுக்கும், தவறான வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாது. அப்படி தெரிந்திருந்தால், தமிழ் தேசிய கட்சியை, நிதி பற்றாக்குறையால் தொடர்ந்து நடத்த முடியாமல் காங்கிரசுடன் இணைத்திருந்திருக்க மாட்டார்கள்.

அந்த காலகட்டத்தில் தி.மு.க. தொண்டர்களுக்கும், த.தே.க. தொண்டர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு ரத்தக் களறியில் முடியும். அப்பாவின் எல்லா கார்களிலும், முன் இருக்கையின் அடியில் பெரிய வீச்சரிவாள் ஒன்று இருக்கும்.

அப்பாவின் டிரைவர் பாபுராவ், ஆந்திராவைச் சேர்ந்தவர். 6½ அடி உயரம், நல்ல கருப்பு நிறம். கமல்ஹாசன் நடித்த ‘மைக்கேல் மத காமராஜன்’ படத்தில் வரும் பீம்பாய் கதாபாத்திரம், பஞ்சு அருணாசலத்துக்கு பாபுராவை பார்த்துதான் வந்திருக்க வேண்டும்.

ஒரு தடவை தி.மு.க. ஆட்கள் இருபது பேர் அப்பாவின் காரை சூழ்ந்து கொண்டார்கள். எல்லாருடைய கையிலும் உருட்டு கட்டைகள். சில வினாடிகளில் கார் கண்ணாடியை உடைத்து அப்பா மீது கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்ற நிலைமை.

பாபுராவ், இருக்கைக்கு கீழே இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு, காரை விட்டு கீழே இறங்கி அரிவாளை தலைக்கு மேலே தூக்கி ‘ஏய்ய்ய்ய்...’ என்று ஒரு சுற்று சுற்ற, அது சாட்சாத் மதுரைவீரனை போல இருந்ததாக சொல்வார்கள். தாக்க வந்தவர்கள் உயிர் பயத்துடன் சிதறி ஓடிப்போய் விட்டார்கள்.

ஒரு நாள் அப்பா, சின்ன அண்ணாமலை, ஈ.வி.கே.சம்பத் ஆகியோர் அப்பாவின் காரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றிற்காக காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்தார்கள். கார் காஞ்சிபுரத்துக்குள் நுழையும் போது, எதிரே ஒரு பிரமாண்டமான ஊர்வலம்.

அண்ணாவை ஒரு ரதத்தில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். ஊர்வலம் வரும் பாதையில், இவர்கள் வந்த கார் நடுவில் நிற்கிறது. அந்த காலத்தில் கார்கள் மிகக் குறைவு. காஞ்சிபுரம் போன்ற சிறிய நகரங்களில் பத்து பதினைந்து கார்கள் இருந்தாலே அதிகம். அதனால் இவர்கள் சென்ற பிளைமவுத் கார் அந்த சாலையில் தனித்துத் தெரிந்தது. ஊர்வலத்தின் முன் சென்ற கூட்டம், இவர்கள் கார் நின்ற இடத்தை நெருங்கியது.

ஊர்வலத்தில் வந்தவர்கள், முன் சீட்டில் உட்கார்ந்து இருந்த அப்பாவை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

“டேய் கண்ணதாசன்டா” என்று ஒருவன் குரல் கொடுக்க, பலர் குனிந்து காருக்குள் பார்க்க, ‘இன்னைக்கு நாம செத்தோம்’ என்று சொல்லி சின்ன அண்ணாமலை, தன் முதுகு மட்டும் தெரியும்படி காருக்குள் நன்றாக குனிந்து கொள்கிறார். சம்பத்தும் அப்பாவும் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

கூட்டத்தில் சிலர் காரின் முன் பகுதி மீது ஏறி குதிக்கிறார்கள். இன்னும் சிலர் காரின் மேல் பகுதியில் ஏறி காலால் கீழே உதைக்கிறார்கள். இரண்டாயிரம் பேருக்கு மேல் இருக்கும் கூட்டத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு கீழே இறங்குவது முட்டாள்தனம் என்பதை உணர்ந்த பாபுராவ், அப்பாவை காப்பாற்றும் எண்ணத்துடன் ஒரு கை இருக்கைக்கு கீழே இருக்கும் அரிவாளின் மீதும், பார்வை அப்பாவின் மீதும் இருக்கும் படியாக தயாராக இருக் கிறார்.

யாராவது அப்பா மீது கையை வைத்தால் அரிவாளை எடுத்து முடிந்த வரையில் போராடலாம் என்ற தீர்மானத்துடன் பாபுராவ் இருப்பது அப்பாவுக்கு தெரிகிறது.

இதற்குள் அண்ணா இருக்கும் ரதம் கார் அருகில் வந்து விடுகிறது.

என்ன நினைத்தாரோ, அப்பா சட்டென்று காரில் இருந்து கீழே இறங்கி, மேலே ரதத்தில் அமர்ந்திருக்கும் அண்ணாவைப் பார்த்து சத்தமாக “வணக்கம் அண்ணா” என்று சொல்ல, அண்ணா திரும்பிப் பார்த்து, “அட நம்ம கண்ணதாசன்...” என்கிறார்,

இதற்குள் சம்பத்துக்கும் நடப்பது புரிந்து விடுகிறது. அவரும் வேகமாக கீழே இறங்கி “வணக்கம் அண்ணா” என்று சொல்ல, “அட... தோழர் சம்பத்” என்று சொல்லிவிட்டு கூட்டத்தைப் பார்க்கிறார்.

இவர்கள் காரின் மீது நிற்கும் தொண்டர்களைப் பார்த்து “எல்லாரும் கீழ இறங்குங்க, இவங்க வண்டி போக வழியை விட்டு ஒதுங்கி நில்லுங்க” என்று அண்ணா சொல்ல, மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் போல கூட்டம் ஒதுங்கி நிற்கிறது. அண்ணாவுக்கு நன்றி சொல்லிவிட்டு காரில் ஏற கார் நகர்கிறது.

நிம்மதிப்பெருமூச்சு விட்ட சின்ன அண்ணாமலை அப்பாவிடம், “எப்படி உங்களுக்கு கீழ இறங்கணும்னு தோணுச்சு?” என்று கேட்க, “அண்ணாவா இருந்ததால கீழ இறங்குனேன். வந்தது வேற யாரா இருந்திருந்தாலும் நம்ம இரங்கல் கூட்டத்துக்கு நாமே போறது போலத்தான் ஆகி இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் அப்பா.

அப்பாவும் அண்ணாவும் ஒரு முறை வெளியூரில், ஒரு பொதுக்கூட்டத்திற்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். ஒரு இடத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டு இருக்கிறது. இவர்கள் சென்ற கார் அந்த இடத்தில் நிற்கிறது. அப்போது ஒரு மூதாட்டி வேர்க்கடலை விற்றுக் கொண்டு வருகிறார்.

அப்பாவுக்கு ஒரு பழக்கம் உண்டு. எங்காவது கார் நின்றால் அங்கு விற்கப்படும் பொருட்களை வாங்கி விடுவார். ஒன்று சாப்பிட வேண்டும் என்ற ஆசை, இரண்டு தேவைக்கு மேல் நான்கு மடங்கு வாங்குவார்.

அம்மா கேட்டால் “இது அவங்களுக்கு பிழைப்பு, பாவம்” என்பார். போகின்ற இடத்தில் அதை அப்படியே அங்கு இருப்பவர்களுக்கு தந்து விடுவார்.

இங்கே அந்த மூதாட்டி வேர்க்கடலை விற்பதைப் பார்த்து, அண்ணாவிடம், “அண்ணா நிலக்கடலை வாங்கவா?” என்று கேட்கிறார்.

உடனே அண்ணா “இங்க பாரு இவ்வளவு வெள்ளரிக்காயை வாங்கி வச்சு இருக்க, இப்போ இதை வாங்கணுமா?”

“இல்லண்ணா.. நிலக்கடலை…” என்று அப்பா இழுக்க...

“சரி, சொன்னா கேக்கவா போற, வாங்கு” என்று அண்ணா சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

நிலக்கடலை பொட்டலங்களை வாங்கி காருக்குள் வைத்து விட்டு அப்பாவும், அண்ணாவும் ஆளுக்கு ஒன்றை பிரித்து சாப்பிடுகின்றனர்.

அப்பா சாப்பிட்டு முடித்த பிறகு, கடலை பொட்டலத்தை தூக்கி எறியப் போனவர் அதை பிரித்துப் பார்க்கிறார். ஒரு பழைய செய்தித்தாளின் பக்கம் அது. அதில் ஒரு கவிதை அச்சிடப்பட்டு இருக்கிறது. அந்தக் கவிதை-

‘கல்லைத்தான் மண்ணத்தான்

காய்ச்சித்தான் குடிக்கத்தான்

கற்பித்தானா’

இதைப் படித்ததும் அந்த வரிகள் அவரது மனதில் பதிந்து போனது.

இறைவன் அருளால் அப்பாவுக்கு ஒரு சக்தி இருந்தது. ஒரு கவிதையை படித்தவுடன் அது அவரது மனதில் அப்படியே பதிந்துவிடும். திரும்ப திரும்ப சொல்லிப் பார்த்து மனப்பாடம் செய்ய அவசியம் இல்லை. இந்தப் பாடலும் அவரது மனதில் பதிந்து போனது.

பின்னாளில் ‘பாவ மன்னிப்பு’ படத்திற்கு பாடல் எழுதும் போது இந்த வரி களின் பாதிப்பால்,

‘அத்தான் என்னத்தான்

அவர் என்னத்தான்

எப்படி சொல்வேனடி’

என்ற பாடலை எழுதினார்.

இந்தப் படத்தை இந்தியில் தயாரித்தபோது, இந்தி பாடலாசிரியர் ராஜேந்திர கிஷன் என்பவர் பாடல் எழுத வந்தார். அவரிடம் ‘அத்தான் என்னத்தான்’ பாடலை போட்டுக் காட்டிய இயக்குனர் அதே போல வார்த்தைகள் வேண்டும் என்று கேட்டார்.

பாடலை முழுவதும் கேட்ட ராஜேந்திர கிஷன், ‘அது என்ன தான்... தான்’ என்று கேட்டார்.

ஒவ்வொரு தானும் அது இடம்பெறும் இடத்தைப் பொருத்து வேறு வேறு அர்த்தம் தரும் என்று இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

உடனே ராஜேந்திர கிஷன், “என்னால் இது போல எழுத முடியாது, காரணம் இதுபோன்ற வார்த்தை இந்தியில் இல்லை. இது தமிழில் மட்டுமே சாத்தியம்” என்று சொல்லி விட்டு வேறு விதமாக எழுதித்தந்தார்.

‘தமிழில் மட்டும்தான் இது முடியும்’ என்று ஒரு இந்தி பாடலாசிரியர் சொன்னது தமிழுக்கு கிடைத்த பெருமை. தமிழன்னையின் கருணையால் கண்ணதாசனுக்கு கிடைத்த பெருமை.

-தொடரும்.

நலந்தானா... நலந்தானா

அண்ணா உடல் நலம் இல்லாமல் இருந்த போது, அப்பா மிகவும் கலங்கிப் போய் இருந்தார்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்திற்காக பாடல் எழுதும்போது அண்ணாவின் உடல் நிலையை விசாரிப்பது போல ‘நலந்தானா நலந்தானா… உடலும் உள்ளமும் நலந்தானா..’ என்று எழுதினார்.

கண்ணதாசன் தன்னைப்பற்றி தன் உடல் நிலையைப் பற்றித்தான் கேட்கிறார் என்பதை அண்ணாவும் உணர்ந்திருப்பார் போலும்.

ஒரு கட்டுரையில் அண்ணா இப்படி எழுதுகிறார்...

“நான் உள்ளே இருக்கிறேன், அறைக்கு வெளியே என் பேரன், ‘நலந்தானா... நலந்தானா... உடலும் உள்ளமும் நலந்தானா...’ என்று பாடிக்கொண்டு இருக்கிறான். அது என் உடல் நிலையை பற்றி கேட்பது போல் தோன்றுகிறது”

ஒருவருடைய உண்மையான அன்பு எந்த வழியிலாவது மற்றவருக்கு புரிந்துவிடும் என்பதற்கு ‘நலந்தானா... நலந்தானா...’ பாடலே சாட்சி.

Next Story