‘நான் கூச்சம் நிறைந்த பெண்..’ - அமிதாப்பச்சன் மகள் மனந்திறக்கிறார்


‘நான் கூச்சம் நிறைந்த பெண்..’ - அமிதாப்பச்சன் மகள் மனந்திறக்கிறார்
x
தினத்தந்தி 11 Aug 2019 6:17 AM GMT (Updated: 11 Aug 2019 6:17 AM GMT)

இந்தி சீனியர் ஸ்டார் அமிதாப்பச்சனின் வாரிசுகளில் நடிகர் அபிஷேக்பச்சனை அறிந்த அளவுக்கு அவரது புதல்வி ஸ்வேதா பச்சனை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

ந்தி சீனியர் ஸ்டார் அமிதாப்பச்சனின் வாரிசுகளில் நடிகர் அபிஷேக்பச்சனை அறிந்த அளவுக்கு அவரது புதல்வி ஸ்வேதா பச்சனை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், பேஷன் டிசைனர், எழுத்தாளர் என்று தனக்கென ஒரு தனி அடையாளத்தை வளர்த்துக்கொண்டிருப்பவர், ஸ்வேதா.

அவரது பேட்டி:

ஆடைகள் வடிவமைப்பது, எழுதுவது இரண்டில் உங்களுக்கு கடினமானது எது?

ஆடைகள் வடிவமைப்பதுதான் கடினம். காரணம், நான் அதற்கான பயிற்சி பெற்றவள் இல்லை. ஆனால், நான் என் வாழ்க்கை முழுவதும் அவ்வப்போது எழுதிக்கொண்டே இருந்திருக்கிறேன். நமக்குப் பொருத்தமான ஆடையை அணிந்து பார்த்து தேர்வு செய்வது இயல்பானது. ஆனால், மற்றவர்களுக்கான ஆடைகளை, அவர்கள் உடல் வகை, நிறத்தை மனதில் கொண்டு வடிவமைப்பது கடினமானது. நான் மோனிஷா சிங்குடன் இணைந்து ஆடை வடிவமைப்பு தொழிலில் இறங்கியிருக்கிறேன். இத்துறையில் 28 ஆண்டுகளாக இருக்கும் அவர், அருமையான ஆசிரியை. அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறார், கைகொடுத்திருக் கிறார்.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நீங்கள் இதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?

எனக்கு 44 வயது. 23 வயதிலேயே குழந்தைகள் பெற்றுவிட்டேன். இன்று அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். அவர்கள் என்னை சார்ந்திருப்பதில்லை. அதனால் நான் அதிர்ஷ்டசாலி. நான் ஒரு வழக்கமான இல்லத்தரசிதான். குழந்தைகள் இருவரும் பெரியவர்களாகி வெளியே சென்றுவிட்டபிறகு நானும் வீட்டைத் தாண்டி காலடி வைத்து, நான் விரும்புவதையும் செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போதும் அவர்கள் வீட்டுக்கு வந்தால், நான் ஒரு வழக்கமான அம்மாவாகி விடுவேன்.

உங்கள் ஆடைகளுக்கான விளம்பர போஸ்டர்களில் உங்களுடன் உங்கள் மகள் நவ்யாவும் தோன்றுகிறார். ஆடை வடிவமைப்பில் அவர் உங்களுக்கு உதவுகிறாரா?

நவ்யா தற்போது நியூயார்க்கில் இருக்கிறாள். அவள் பேஷன் ஆடைகளில் அதிக ஆர்வம் உள்ளவள். அவள் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம், ஏதாவது வித்தியாசமாக அணிந்து வருவாள். அதைப் பார்த்து நான் ‘வாவ்’ என்பேன். ஆடை வடிவமைப்பில் நவ்யா எனக்கு உதவுகிறாள் என்றோ, அவள் அணியும் ஆடைகளின் தாக்கம் எனது வடிவமைப்பில் இருக்கிறது என்றோ கூற மாட்டேன். ஆனால் இந்தக் காலத்துப் பசங்க எந்த மாதிரி ஆடைகளை, பிராண்ட்களை விரும்புகிறார்கள் என்பதை நவ்யா மூலமாகத் தெரிந்துகொள்கிறேன்.

நீங்கள் உங்கள் மகளிடம் இருந்து நகை மற்றும் அலங்கார பொருட்கள் எதையாவது வாங்கி பயன்படுத்துகிறீர்களா?

இல்லை, அவள்தான் என்னிடம் இருந்து அதிகம் எடுத்துக்கொள்வாள். சிலசமயங்களில் நான் எனது அணிகலன் பெட்டியைத் திறந்தால் சிலது காணாமல் போயிருக்கும். நான் உடனே அதை நவ்யாதான் எடுத்திருப்பாள் என்று புரிந்துகொள்வேன். ஆனால் அதை அவளிடம் இருந்து திரும்பி வாங்கிவர வேண்டும் என்றால் நான் மூன்று விமானம் பிடிச்சு போகணும். திருப்பிக் கொடுப்பதற்கு அவளும் கூட அதே காரணத்தை சொல்லலாம். ஆனால் அவளோ, ‘மம்மி... நான் போட்டுப் பார்த்தேன்... நல்லாயிருந்துச்சு... அப்படியே நைசா கிளம்பிவந்துட்டேன்’ என்பாள்.

நீங்கள் உங்கள் பெற்றோரின் ஆடை, அணிகலன்களை அணிந்திருக்கிறீர்களா?

நான் எப்போதும் அம்மாவிடம் இருந்துதான் எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் டெல்லியிலும் மும்பையிலும் மாறி மாறி வசிக்கிறேன். சிலநேரங்களில் நான் மும்பையில் வெளியே செல்ல நினைக்கும்போது சரியான ஆடை இருக்காது. அதனால் அம்மாவிடம் இருந்து கடன் வாங்கி, ‘அட்ஜஸ்ட்’ செய்து அணிந்துகொள்வேன். உடற்பயிற்சி வேளைகளுக்கு அப்பாவின் டி-ஷர்ட்களை வாங்கிக் கொள்வேன். அவற்றில் சில எனது கால் முட்டி வரை இருக்கும். ஆனால் அது எனக்கு வசதியாகவே தோன்றும்.

இப்போதும் அழகாக ஆடை அணியக்கூடியவர்களில் உங்கள் தந்தை குறிப்பிடத்தக்கவர். அவரது ‘ஸ்டைல் சென்ஸ்’ பற்றி உங்கள் கருத்து?

அவர் புதுப்புது வண்ணங்களை அணிந்து பார்ப்பார். ஒருவர் அணிந்திருக்கும்போது கண்றாவியாகத் தோன்றும் ஆடை கூட அப்பா அணிந்ததும் அழகாகிவிடும். அவரிடம் ஏதோ இருக்கிறது. ஊதா நிற சூட் கூட அப்பா அணிந்தால் கலக்கலாக இருக்கும்.

எழுத்து என்பது உங்கள் குடும்பத் திறமை. அது உங்களிடமும் வெளிப்பட்டபோது அப்பா என்ன சொன்னார்?

எழுத்து எங்கள் குடும்பப் பாரம்பரியம் என்பதால், நான் எழுதுவதை அறிந்தபோது அப்பா மிகவும் உற்சாகமாகிவிட்டார். எங்கள் தாத்தா ஒரு நல்ல எழுத்தாளர். நமது குடும்பத்தில் தமது பக்கத்தில் இருந்து ஒருவர் புத்தக வெளியீடு வரை போயிருக்கிறாரே என்று அப்பா, என்னை நினைத்து சந்தோஷப்பட்டார்.

உங்கள் சகோதரர் அபிஷேக்கும் கவிதை எழுதுவதாக ஒருமுறை கூறினாரே?

அபிஷேக் கவிதை எழுதுகிறானா? அவன் என்னிடம் காட்டியதே இல்லையே! இப்போதே நான் அவனிடம் சென்று, அவன் எழுதிய கவிதையை காட்டச்சொல்லப்போகிறேன்.

ஒருவேளை அவர் விளையாட்டுக்காக அப்படிச் சொல்லியிருக்கலாம்?

இல்லை... இல்லை. அவன் கவிதை எழுதுகிறேன் என்று சொன்னால் நிச்சயம் எழுதியிருப்பான். அதை யாரிடமும் காட்டாமல்தான் மறைத்திருக் கிறான். தற்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! (சிரிக்கிறார்).

நீங்களும் உங்கள் கணவர் நந்தாவும் சினிமா பாரம் பரியத்தில் வந்தவர்கள். எனவே உங்கள் குழந்தைகளை சினிமாவுக்கு அனுமதிப்பீர்களா?

நிச்சயமாக மாட்டேன். முதலில் அவர்கள் படிப்பை முடிக்கட்டும், சொந்தமாக முடிவெடுக்கும் நிலையை எட்டட்டும். அதன் பிறகு பார்க்கலாம்.

ஆனால் உங்களுக்கு சினிமா ஆசை இருந்ததா?

எனக்கு சினிமாவுக்கான விருப்பமோ, திறமையோ, தோற்றமோ கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நான் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவள்.

புன்னகையுடன் சொல்லி முடிக்கிறார், ஸ்வேதா பச்சன்.

***

Next Story