பாடல்களுக்கு உயிர் கொடுப்பது நடிகர்கள் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
நலிந்த இசை கலைஞர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் சிரஞ்சீவி, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது:-
“சினிமாவில் பின்னணி பாடகர்கள் பலரும் அழகான பாடல்களை இனிமையான குரல்களால் பாடுகிறார்கள். இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட பலருடையை கூட்டு முயற்சி இருந்தால்தான் பாடல்கள் ரசிகர்களுக்கு போய் சேரும். நாங்கள் எவ்வளவுதான் அனுபவித்து சிறப்பாக பாடினாலும் அதற்கு ஏற்ப நடிகர், நடிகைகளும் நடிக்க வேண்டும்.
அப்போதுதான் பாடலுக்கு உயிர் இருக்கும். பாடலை தனியாக கேட்கும்போது அற்புதமாக உள்ளது என்று சொல்லலாம். ஆனாலும் படத்தில் பாடலுக்கு உயிர் கொடுப்பது நடிகர்கள்தான். முந்தைய காலங்களில் ரிக்கார்டிங் தியேட்டர்களில் பாடல் பதிவுகள் பிரமாண்டமாக நடக்கும். அந்த சூழலை பார்க்கும்போது ஒரு பண்டிகை மாதிரி இருக்கும்.
மொத்த இசைக்கருவிகளையும் குவித்து இருப்பார்கள். வாத்திய கலைஞர்கள் நிறைய பேர் குவிந்து இருப்பார்கள். பாடல் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். இப்போது அந்த நிலைமை இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாமே மாறிவிட்டன.
அதை நினைத்து சந்தோஷப்படுவதா? வேதனைப்படுவதா? என்று புரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி வாத்திய கலைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு உதவும் பொறுப்பு சினிமா துறையினருக்கு இருக்கிறது.
இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசினார்.
Related Tags :
Next Story