’சுசி லீக்ஸ்’ போல் ’சுசி குக்’ யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் சுசித்ரா


’சுசி லீக்ஸ்’ போல் ’சுசி குக்’ யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் சுசித்ரா
x
தினத்தந்தி 4 Dec 2019 2:46 PM IST (Updated: 4 Dec 2019 2:46 PM IST)
t-max-icont-min-icon

பாடகி சுசித்ரா சுசி குக் யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார்.

சென்னை

கடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் தீயாகப் பரவின.

அந்த வீடியோக்கள் அனைத்தும் பின்னணிப் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக அவரது கணவர் கார்த்திக் குமார் தெரிவித்தார். அதே வேளையில் சுசித்ராவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து தனது சகோதரியுடன் அடையாறில் உள்ள வீட்டில் வசித்து வந்த சுசித்ரா காணாமல் போய்விட்டதாக கடந்த மாதம் அவரது சகோதரி சுஜிதா போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து விசாரணை செய்த போலீசார் சுசித்ரா நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருப்பதை கண்டறிந்தனர். அப்போது தான் காணாமல் போகவில்லை எனவும் தனது சகோதரி சுஜிதாவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டிலிருந்து வெளியேறி விட்டதாகவும் போலீசில் தெரிவித்தார் சுஜிதா.

மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல நடத்துவதால் குடும்பத்தினரை விட்டு விலகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

4.5 லட்சம் பேர் பின் தொடரும் என் ட்விட்டர் பக்கத்தை யாரோ தவறாக பயன்படுத்தினர். நிறைய பேருக்கு இதனால் பிரச்சினை என்பதுதான் எனக்கு மனவலியை ஏற்படுத்தியது. நான் மன அழுத்தத்துக்கு உள்ளானேன்.

அதற்கு மற்றுமொரு காரணம் என்னுடைய விவாகரத்தும் கூட. எனக்கு விவாகரத்தாகி ஒரு வருட காலமாகிறது. என்னுடைய விவாகரத்தும் வீடியோ வெளியானதும் ஒரே நேரத்தில் நடந்ததால் எனக்கு அந்த காலகட்டம் கஷ்டமாக இருந்தது.

தேவையில்லாமல் தனுஷ், அனிருத் எல்லோரையும் சம்பந்தப்படுத்தி வெளியான வீடியோக்கள் ஒன்றைக் கூட நான் இன்னும் பார்க்கவில்லை. அந்த வீடியோக்கள் மார்ஃபிங் செய்யப்பட்டதா என்று கூட எனக்குத் தெரியாது. யார் இதை செய்தார்கள் என்பது காலப்போக்கில் எனக்குத் தெரிய வரலாம்.

அதேநேரம் நான் கல்வி கற்க ஆரம்பித்தேன். எனக்கு மிகவும் பிடித்தது சமையல் கலை. லண்டனுக்குச் சென்று பிரெஞ்ச் குக்கிங் கற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறேன். அதை நம் மக்களுக்கும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். யூடியூபில் சுசி குக் என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட இருக்கிறேன். யார் சுசி லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கை தவறாக  பயன்படுத்தினார்களோ அவர்களின் மூக்கில் குத்துவிடுவது போல் இருக்கத்தான் சுசி குக். டிசம்பர் 24-ம் தேதி நானும் ரஞ்சித்தும் பணியாற்றிக் கொண்டிருக்கும் பாடல் ஒன்று வெளியாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

Next Story