தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் - மலேசிய விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு


தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் - மலேசிய விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு
x
தினத்தந்தி 5 Dec 2019 12:00 AM GMT (Updated: 4 Dec 2019 10:43 PM GMT)

தொழில்நுட்ப வாகனத்தில் ஏற்றி தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என மலேசிய விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார்.

கோலாலம்பூர்,

கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. மலேசிய நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நூலை அறிமுகம் செய்தார். முன்னாள் மந்திரியும், நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்துரை வழங்கினார். மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

மலேசியா, தமிழ்ப் பண்பாட்டின் இரண்டாம் தாய்மடி. காட்டு வெள்ளத்தை கடந்துசெல்லும் தாயின் கழுத்தைக் கட்டிக் கொள்ளும் குழந்தையைப்போல மலேசியத் தமிழர்கள் தமிழை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். மலேசியாவில் தமிழ் வளர்க்கும் ஒவ்வொருவருக்கும் என் வணக்கம். மலேசியா-சிங்கப்பூர்-இலங்கைத் தமிழர்களால்தான் தமிழ் உலகளாவிய நீட்சியை, மாட்சியைப் பெற்றிருக்கிறது.

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமன்று. மூவாயிரமாண்டு வரலாற்றுத் தொடர்ச்சியை கட்டி இணைத்திருக்கும் ஒரு தங்கக் கயிறு. உலகத்தின் மூத்த பல மொழிகளெல்லாம் முடிந்து போயின. சாக்ரடீஸ் பேசிய கிரேக்க மொழி 10-ம் நூற்றாண்டுக்கு மேல் இல்லை. ஏசு பேசிய ஹீப்ரு மொழி 2-ம் நூற்றாண்டோடு முடிந்துவிட்டது.

நான்காயிரம் ஆண்டு நாகரிகம்கொண்ட சுமேரிய மொழி இன்று இல்லை. சீசர் பேசிய லத்தீன் மொழியும் இன்று புழங்கப்படவில்லை. காளிதாசன் கவிதை புனைந்ததும் வேத உபநிடதங்கள் எழுதித்தந்ததுமான தொன்மையான சமஸ்கிருதம் இன்று மக்கள் மொழியாக மாண்புறவில்லை. ஆனால் ஆதி மொழிகளில் எழுத்திலும், பேச்சிலும் தொடர்ச்சி கொண்டிருப்பது தமிழ்.

இனத்தைக் கட்டிக்காப்பது மொழியின் பெருமை. மொழியைக் கட்டிக்காப்பது இனத்தின் கடமை. மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்வது தமிழர்களின் தலையாய பொறுப்பாகும். தொழில்நுட்ப வாகனத்தில் ஏற்றித் தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

தமிழாற்றுப்படை என் வாழ்நாள் ஆவணமாகும். என் 50 ஆண்டு கல்வியை நான்கு ஆண்டுகள் உழைப்பில் இறக்கிவைத்த இலக்கியமாகும். இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.


Next Story