சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு - நடிகர் சுரேஷ்கோபி மீது குற்றப்பத்திரிகை


சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு - நடிகர் சுரேஷ்கோபி மீது குற்றப்பத்திரிகை
x
தினத்தந்தி 5 Dec 2019 5:47 AM IST (Updated: 5 Dec 2019 5:47 AM IST)
t-max-icont-min-icon

சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்ததாக, நடிகர் சுரேஷ்கோபி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி, தமிழில் அஜித்குமார் நடித்த தீனா, சரத்குமாரின் சமஸ்தானம், விக்ரமின் ஐ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னால் சுரேஷ் கோபி, ரூ.60 லட்சத்திலும், ரூ.80 லட்சத்திலும் 2 சொகுசு கார்களை விலைக்கு வாங்கினார்.

அந்த கார்களை கேரளாவில் பதிவு செய்தால் அதிக வரி செலுத்த வேண்டும் என்று கருதி குறைந்த வரியை வசூலிக்கும் புதுச்சேரியில் பதிவு செய்தார். புதுச்சேரியில் வசிப்பதாக போலி ஆவணங்களை காட்டி காரை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.19 லட்சங்களுக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

கேரள குற்றப்பிரிவு போலீசார் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சுரேஷ் கோபி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கில் போலீசார் தற்போது குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளதாகவும் திருவனந்தபுரம் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்து உள்ளனர்.

இதுபோல் நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில் ஆகியோரும் போலி ஆவணங்கள் கொடுத்து தங்கள் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பகத் பாசில் அபராத தொகையை செலுத்திவிட்டார்.


Next Story