நாளை உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் ‘தர்பார்’


நாளை உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் ‘தர்பார்’
x
தினத்தந்தி 8 Jan 2020 4:40 AM IST (Updated: 8 Jan 2020 4:40 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இதில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடித்துள்ளனர்.

யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. 

ரவுடிகளுடன் ரஜினி ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சிகள் டிரெய்லரில் இருந்தன. தணிக்கையில் படத்துக்கு யூ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர்.

ஆனால் வன்முறை அதிகம் இருப்பதாக கூறி தணிக்கை குழுவினர் யூ சான்றிதழ் அளிக்க மறுத்து யூ ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். தர்பார் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நாளை வெளியாகிறது. அமெரிக்காவில் இன்று தர்பார் சிறப்பு காட்சியை திரையிடுகின்றனர்.

உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் தர்பார் திரைக்கு வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத நாடுகளிலும் தர்பார் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

கபாலி படத்துக்கு விமானத்தில் விளம்பரம் செய்தது போல் தர்பார் படத்தையும் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் விமானத்தில் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

Next Story