மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற தீபிகா படுகோனே படத்துக்கு எதிர்ப்பு


மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற தீபிகா படுகோனே படத்துக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 10 Jan 2020 5:30 AM IST (Updated: 10 Jan 2020 2:49 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு டாப்சி, கியூமா குரோசி, சுவரா பாஸ்கர், தியா மிர்சா, சோனம் கபூர், அலியா பட், சோனாக்சி சின்ஹா உள்ளிட்ட பல நடிகைகள் கண்டனம் தெரிவித்தனர்.

தீபிகா படுகோனே பல்கலைக்கழகத்துக்கே நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டத்திலும் கலந்து கொண்டார். தீபிகா படுகோனே துணிச்சலை பலரும் பாராட்டினர். தீபிகா படுகோனேவுக்கு எதிராகவும் சிலர் குரல் கொடுத்தனர். அவர் நடித்துள்ள சப்பாக் படத்தின் விளம்பரத்துக்காக இப்படி செய்வதாக விமர்சித்தனர்.

அந்த படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலைத்தளங்களில் கருத்து பதிவிடுகிறார்கள். அத்துடன் சப்பாக் படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து அதை ரத்து செய்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தீபிகா படுகோனே, “எனது நடவடிக்கையை விமர்சித்து கருத்து சொல்வார்கள் என்று ஏற்கனவே தெரியும். நான் நடித்த பத்மாவத் படம் வந்தபோதும் இப்படித்தான் எதிர்த்தார்கள். இதற்காக எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன். மனதுக்கு சரி என்று தோன்றுவதை சொல்லி விடுவேன். இந்தியாவின் நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது.” என்றார்.

தீபிகாவின் சப்பாக் படம் இன்று (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது.

Next Story