அம்மன் வேடத்தில் நடிக்க 48 நாட்கள் விரதம் “நயன்தாராவின் அர்ப்பணிப்பு பிரமிக்க வைத்தது” பட அதிபர் ஐசரி கே.கணேஷ் பேட்டி
‘அம்மன் வேடத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 48 நாட்கள் விரதம் இருந்தார். அவருடைய அர்ப்பணிப்பு பிரமிக்க வைத்தது,’ என்று பட அதிபர் ஐசரி கே.கணேஷ் கூறினார்.
சென்னை,
நயன்தாரா முதன்முதலாக அம்மன் வேடத்தில் நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் அவருடன் ஊர்வசி, மவுலி, கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் ஆகிய இருவரும் இணைந்து டைரக்டு செய்திருக்கிறார்கள். ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இந்த படத்தில் நயன்தாராவை அம்மன் வேடத்தில் நடிக்க வைத்த அனுபவம் பற்றி ஐசரி கே.கணேஷ் கூறியதாவது:-
முதன்முறையாக நயன்தாராவை தெய்வீகமாக பார்க்கிறேன். இந்த தெய்வீக தோற்றத்துக்கு காரணம் செயற்கை பூச்சுகளோ, ‘கிராபிக்ஸ்’ தொழில்நுட்பமோ அல்ல. அவர் இந்த கதாபாத்திரத்திற்காக 48 நாட்கள் விரதம் இருந்து, அர்ப்பணிப்புடன் தன்னை சாந்தமாக மாற்றிக்கொண்டதே காரணம்.
தொழில் மீது காதல்
அவரது அர்ப்பணிப்பு எங்கள் அனைவரையும் பிரமிக்க செய்துவிட்டது. தன்னை வருத்தி பக்தியுடன் அம்மனை வணங்கி, கடந்த 48 நாட்களாக விரதம் இருந்தது என்னை சிலிர்க்க வைத்தது. ‘மூக்குத்தி அம்மன்’ கதாப்பாத்திரத்துக்காக அவர் எடுத்துகொண்ட சிரத்தை தொழில் மீது அவர் கொண்ட காதலை காட்டுகிறது.
அவரது இந்த அர்ப்பணிப்பு திரையில் அட்டகாசமாக பிரதிபலித்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
அவரது தோற்றம் மட்டும் அல்லாமல் அவருடைய நடிப்பும் இந்த படத்தில் அருமையாக வந்திருக்கிறது. மிக விரைவில் ‘டிரெய்லர்’ மற்றும் பாடல்களை வெளியிட உள்ளோம். திரைப்படத்தை வருகிற கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்”.
இவ்வாறு ஐசரி கே.கணேஷ் கூறினார்.
Related Tags :
Next Story