‘வலிமை’ படத்தில் அஜித்குமாருக்கு 3 வில்லன்கள்
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது.
‘வலிமை’ படத்தில் அஜித்குமாருக்கு போலீஸ் அதிகாரி வேடம். இதற்காக உடற்பயிற்சிகள் மூலம் தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார்.
அஜித்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தய காட்சிகளும் படத்தில் இடம் பெறுகின்றன. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகை விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.
கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, தமன்னா, யாமி கவுதம் உள்ளிட்ட பல நடிகைகள் பெயர்கள் அடிபட்டன. இறுதியில் கியூமா குரோஷியை தேர்வு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவர் ஏற்கனவே ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லன்களாக 3 பிரபல நடிகர்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு கதாநாயகன் கார்த்திகேயாவை வில்லனாக தேர்வு செய்துவிட்டதாக பேசப்படுகிறது. இன்னும் 2 வில்லன் நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாகவும், விரைவில் அவர்கள் யார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘வலிமை’ படம் தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வருகிறது.
Related Tags :
Next Story