மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : டெல்லி கணேஷ்


மக்கள் மனங்களை வென்ற குணச்சித்திரங்கள் : டெல்லி கணேஷ்
x
தினத்தந்தி 5 March 2020 11:00 PM GMT (Updated: 5 March 2020 11:03 AM GMT)

நகைச்சுவை என்பது, வெறுமனே சிரிக்க வைக்கும் நடிப்பு என்ற எண்ணம் மேலோட்டமானது. சிரிக்க வைப்பது கடினமான கலை.

உலக அளவில் சிரிப்பு நடிகர்கள் பலரும் குணச்சித்திர நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். உண்மையை, செயற்கையாகத் தயாரித்துத் தருகிற பொறுப்புமிக்க நடிப்புக்கலை, சினிமாவின் உச்சபட்ச சிறப்பு என்றாலும் பொருந்தும்.

திரையில் எல்லோரும் காணும் காட்சிக்கு ஏற்ப, வெடித்துச் சிரிக்கையிலும், கண் கலங்கி அழுகையிலும் ரசனை உண்மையாக வெளிப்படுகிறதல்லவா? ரசிப்பதைப் போலியாக செய்வது சாத்தியமா என்ன?

ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவங்கள் இருக்கும். அவர்களுடைய தொடர்ந்த திரைப்பயணத்தை, இப்படியான தனித் திறமைகள் தான் தீர்மானித்துத் தரும்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்ற ஊரில் 1944-ம் வருடம் ஆகஸ்டு 1-ந் தேதி பிறந்த கணேஷ், இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவர். தன் வேலை நிமித்தம் டெல்லியில் வசித்து வந்தார்.

சின்ன வயதில் இருந்தே நடிப்புக் கலை மீது ஈர்ப்புக் கொண்டிருந்தார் அவர். டெல்லியைச் சேர்ந்த தட்ஷிண பாரத நாடக சபாவில் தன்னை இணைத்துக் கொண்டு, பல நாடகங்களில் நடித்த கணேஷூக்கு, சினிமா வாய்ப்பு 1976-ம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரால் ‘பட்டினப் பிரவேசம்’ படத்தின் மூலம் நிகழ்ந்தது.

சிவாஜி கணேஷ், ஜெமினிகணேஷ், ஜெய்கணேஷ் வரிசையில் இன்னுமொரு கணேஷான இவருக்கு, தான் கிளம்பி வந்த ஊரான டெல்லியை முன் பெயராக்கினார், கே.பாலசந்தர். அதுமுதல் இன்று வரை ‘டெல்லி கணேஷ்’ என்ற பெயரில் பிரகாசித்து வருகிறார்.

தனக்கு எந்த வேடம் வழங்கப்படுகிறதோ, அந்தப் பாத்திரத்துக்குள் தன்னைப் பிசகின்றி அசலாகப் பொருத்திக்கொள்வது தான் டெல்லி கணேஷின் சிறப்பு எனலாம்.

பாத்திர நியாயம் எதுவோ, அதையே சதா சர்வ காலமும் தனக்குள் உணர்கிற நடிகர்களால் மட்டுமே அப்படி நடிக்க இயலும். தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தை ஏற்று நடித்த கணேஷ், தொடர்ந்து பல படங்களில் நல்ல, தீய, மலிந்த, கொடூரமான, உன்னதமான.. என்று பலவித கதாபாத்திரங்களுக்கு ஒளியூற்றினார்.

ஏழ்மை, இயலாமை, குற்ற உணர்வின் பலவீனம், அறியாமை, வெகுளித்தனம், நடுத்தர வர்க்கத்தின் பிடிவாதம், விசுவாசத்தின் அடிப்படையிலான கண்மூடித்தனமான பற்றுதல், கோழைத்தனம், சார்ந்திருத்தலின் மனநடுக்கம்.. இப்படி மனித வாழ்வின் யதார்த்தங்கள் பலவற்றை, திரையில் அச்சுப்பிசகாமல் தோற்றுவித்த நல்லதொரு நடிகர் டெல்லி கணேஷ்.

‘தணியாத தாகம்’ படத்தில் நாயகனாக நடித்தார் டெல்லி கணேஷ். இனிய பாடல்கள் நிரம்பியது அந்தப் படம்.

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மனதுக்கு நெருக்கமான நடிகர் பட்டியலில் இவரது இடம் முக்கியமானது. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நாலு வில்லன்களில் ஒருவராக டெல்லி கணேஷ் நடித்தார்.

‘புன்னகை மன்னன்’ படத்தில் கமலின் அப்பாவாக, எரிச்சலுக்குரிய அற்பமான பல வீனத்தை நம் கண்முன் அச்சு அசலாகத் தோற்றுவித்தார்.

‘மைக்கேல் மதன காமராசன்’ படத்தில் பாலக்காட்டு சமையல்காரர் மணி ரோலில், அற்புதமாய் வளையவருவார். ‘காதலா காதலா’ படத்தில் கமல் - பிரபுதேவாவை பாவம் செய்யத் தூண்டும் வீட்டு உரிமையாளர் வேறு யார், நம் கணேஷ்தான்.

‘நாயகன்’ படத்தில் கமலின் பின்புல விசுவாசியாகப் படம் முழுக்கத் தொடர்வார். ‘அவ்வை சண்முகி’ படத்தில் கோடீஸ்வர ஜெமினிகணேஷூக்கு, ஜால்ரா தட்டியபடி ஊடாடும் மேனேஜராக அவரை விட்டால் வேறு யார் நடித்திருக்க முடியும்.

துரை இயக்கத்தில் தேசிய அளவில் போற்றப்பட்ட தமிழ்ப்படம் ‘பசி.’ இந்தப் படத்தில் ஷோபாவின் தந்தையாக ரிக்சா ஓட்டும் விளிம்பு நிலை மனிதராகத் தன்னை முழுவதுமாக அழித்து, வேறொரு புதிய மனிதராக நம் முன்னால் தெரிந்தது டெல்லி கணேஷின் மேதமைக்கு சாட்சி. அதுவரை முற்றிலும் கவனத்திற்கு உட்படாத உலகத்தை காட்சிப்படுத்திய வகையில், ‘பசி’ படமும், அதில் டெல்லி கணேஷ் பாத்திரமும் இன்றும் பேசத்தக்கவை.

பாலச்சந்தரின் ‘சிந்துபைரவி’ படத்தில் இசைக்கலைஞர் குருமூர்த்தியாக, டெல்லி கணேஷ் காட்டிய கச்சிதம் மெச்சப்பட்டது.

ரஜினிகாந்துக்கு மாமனாராக ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப் படத்தில் நடித்த டெல்லிகணேஷ், காண்போர் மனதைக் கரையச் செய்தார்.

வில்லன் வேடங்களிலும் வெளுத்து வாங்கினார் டெல்லி கணேஷ். விசுவின் இயக்கத்தில் ‘சிதம்பர ரகசியம்’ படத்தில் சஸ்பென்ஸ் உடையும் வரை நல்லவராகத் தோற்றமளிக்கும் கறுப்புப் பூனையாக மிளிர்ந்தார்.

45 வருடங்களைக் கடந்து நடிப்பில் மின்னுகிற பண்பட்ட நடிகரான டெல்லி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘எதிரி’ படத்தில் கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு அபாரமாய் நடித்திருந்தார்.

‘தலைநகரம்’ படத்தில் அரசியல்வாதியாகவும், ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் காசு வாங்கிக் கொண்டு அட்மாஸ்பியரில் தோன்றி மறையும் தற்செயல் மனிதராகவும், ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் மகனுக்குச் செல வழித்த பணத்தை வருடக்கணக்காக டைரி போட்டு கணக்கெழுதும் தகப்பனாகவும், இன்றும் திரைப்படம், டி.வி. தொடர்கள், விளம்பரம் என எங்கும் எதிலும் சக்கை போடு போட்டு வருகிறார் டெல்லி கணேஷ்.

முத்தாய்ப்பாகச் சொல்வதற்கு விசு இயக்கத்தில், பாலசந்தரின் கவிதாலயா தயாரித்த ‘பெண்மணி அவள் கண்மணி’ உள்ளது. இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், விசுவின் வீட்டு மாடி போர்ஷனில் குடியிருப்பார். மருமகளின் சொல்லொணாக் கொடுமைகளை, தானும் தன் மனைவி கமலா காமேஷூமாய்ப் பொறுத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வாழ்க்கையை நகர்த்தும் பாத்திரம் அவருக்கானது.

மாமனார் - மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிடும் மருமகள் அருணா, பணத்தைத் திருடியதாக டெல்லிகணேஷ் மனைவியாக நடித்த கமலா காமேஷ் மீது பழி சுமத்துவார். அப்போது அதை, தான் செய்ததாக ஒப்புக்கொண்டு கோவில் குளத்தின் படிக்கட்டில் சென்று அமர்ந்துகொள்வார் டெல்லிகணேஷ்.

அதன்பிறகு தன்னை சந்திக்கும் விசுவிடம், “என் மருமக கில்லாடி. திட்டம் போட்டு திருட்டுப் பட்டம் கட்டி, எங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டு துரத்திடலாம்னு பார்த்தா. நான் விடுவேனா.. நான்தான் திருடினேன்னு ஒத்துக்கிட்டு வெளியேறுறாப்ல, என் பொண்டாட்டியை வீட்லயே இருக்கறாப்ல செய்துட்டேன்.. ஹஹா...” என்று சிரிப்பார்.

அந்தச் சிரிப்பை வார்த்தையால் எழுத முடியாது. வேறு யாராலும் அந்த நடிப்பை சமன் செய்யவும் முடியாது. இன்னொரு நடிகரால் அப்படி நடிக்கவே இயலாது என்று கூறத்தக்க அளவில், அந்தக் காட்சியில் நடிப்பின் இலக்கணமாகவே மாறியிருப்பார் டெல்லி கணேஷ். வாழ்வில் புரையோடிப்போன வறுமையை எதிர்த்து சமர் செய்வதற்கான, பிடிவாத ஆயுதமாகவே ஏழ்மையின் கெக்கலிப்பை நிகழ்த்தியிருப்பார் கணேஷ்.

Next Story