குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ‘இந்தியன்–2’ படத்தை தொடர்ந்து ‘தசாவதாரம்–2’ படம் தயாராகுமா? (பி.சாய் விக்னேஷ், சென்னை–1)
‘தசாவதாரம்’ படத்தின் நாயகன் கமல்ஹாசன், தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் விரும்பினால், அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும்!
***
நயன்தாராவுக்கு சரியான போட்டி யார்? திரிஷாவா, கீர்த்தி சுரேசா? (ப.விக்ரம் குமார், காஞ்சீபுரம்)
அப்படி ஒரு அழகான போட்டி இதுவரை உருவாகவில்லை. அதுபோன்ற ஒரு போட்டியைத்தான் அத்தனை தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!
***
குருவியாரே, தமிழ் பட உலகுக்கு சமீபகாலமாக மும்பை அழகிகளின் வருகை அதிகமாகி இருக்கிறதாமே, உண்மையா? அதற்கு என்ன காரணம்? (ஏ.சுந்தர், கோவில்பட்டி)
மலையாள வரவுகள் அனைவரும் அதிக சம்பளம் கேட்பதால், மும்பை வரவுகள் அதிகரித்து இருக்கிறது!
***
டாப்சியும், எமிஜாக்சனும் என்ன ஆனார்கள்? இருவரையும் திரையில் பார்க்க முடியவில்லையே...? (எம்.அழகர்சாமி, திருச்சி)
டாப்சியும், எமிஜாக்சனும் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்காக டாப்சி மும்பையிலேயே முகாமிட்டு இருக்கிறார். எமிஜாக்சன் லண்டனுக்கும், மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கிறார்!
***
குருவியாரே, வரலட்சுமி சரத்குமாரின் மார்க்கெட் நிலவரம் எப்படியிருக்கிறது? (எஸ்.அரவிந்த், புதுச்சேரி)
வரலட்சுமி சரத்குமாருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர் தனக்கு பொருத்தமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்!
***
தனுஷ், சிம்பு இருவரில், அதிக சம்பளம் வாங்குபவர் யார்? (எல்.விஜயலட்சுமி, குலசேகரன்பட்டினம்)
அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிம்பு பின்தங்கி விட்டார். தனுஷ் மார்க்கெட் இப்போது ஏறுமுகமாக இருப்பதால், அவருடைய சம்பளம் கூடியிருக்கிறது!
***
குருவியாரே, கார்த்தி இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் எது? (வி.சுதர்சன், சிவகாசி)
கார்த்தி இதுவரை 19 படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர், ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது, அவருடைய 20–வது படம்!
***
‘திரவுபதி’ வெற்றி படமா, தோல்வி படமா? படத்தின் வசூல் நிலவரம் எப்படியிருக்கிறது? (தமிழ்மணி, அருப்புக்கோட்டை)
எதிர்பாராத வெற்றி படம். திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது!
***
குருவியாரே, காதல்தேசம், இதயம் ஆகிய படங்களை இயக்கிய கதிர், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
அடுத்து ஒரு புதிய படத்துக்கான கதை விவாதத்தில் கதிர் ஈடுபட்டு இருக்கிறார்!
***
ஆண்ட்ரியாவும், பிரியா ஆனந்தும் உறவினர்களா? இரண்டு பேரும் ஒரே ஜாடையில் தெரிகிறார்களே...? (என்.கலிவரதன், அரக்கோணம்)
ஆண்ட்ரியா பாதி ஆங்கிலேயர், பாதி இந்தியர். பிரியா ஆனந்த், அசல் தமிழ் பெண். இவருடைய பூர்வீகம், மயிலாடுதுறை! இருவருக்கும் எந்த உறவுமுறையும் இல்லை.
***
குருவியாரே, ஏவி.எம். தயாரித்த படங்களில், மிக அதிக நாட்கள் ஓடிய படம் எது? அதிக வசூல் செய்த படம் எது? (ஆர்.ரவீந்தர், நெய்வேலி)
ஏவி.எம் தயாரித்து அதிக நாட்கள் ஓடிய படம், ‘முந்தானை முடிச்சு.’ அதிக வசூல் செய்த படம், ‘சிவாஜி!’
***
ஐஸ்வர்யா மேனன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? அவருக்கு பட வாய்ப்புகள் எப்படியிருக்கிறது? (கே.சி.ரஞ்சித், ஈரோடு)
ஐஸ்வர்யா மேனன், கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு போட்டி நிறைய இருப்பதால், பட வாய்ப்புகள் அதிகமாக இல்லை!
***
குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ எந்த மாதிரியான கதையம்சம் உள்ள படம்? (ஆர்.வி.செண்பகவேல், மதுரவாயல்)
‘அண்ணாத்த,’ குடும்பப்பாங்கான கதையம்சம் உள்ள படம். அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது!
***
60 படங்களில் நடித்து முடித்துள்ள திரிஷா தனது அனுபவங்களை புத்தகமாக எழுதுவாரா? (ஆர்.ராதாகிருஷ்ணன், போளூர்)
திரிஷா, ஷகிலாவுடன் போட்டி போட விரும்பவில்லையாம்!
***
குருவியாரே, கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பது போல் அஜித் தயாரிப்பில் விஜய் நடிப்பாரா? (இரா.ராமு, ஆம்பூர்)
நடித்தால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவர்களும் நண்பர்கள்தான். இரண்டு பேருக்கும் இடையே பல வருடங்களாக நட்பு இருந்து வருகிறது!
***
சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்,’ படத்தின் கதை எப்படிப்பட்டது? (ஜே.ஸ்டீபன் பால்ராஜ், கொரட்டூர்)
வேற்று கிரகவாசிகளை பற்றிய கதையம்சம் கொண்ட படம், அது!
***
குருவியாரே, பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகிய இரண்டு பேரில் அதிக படங்களில் நடித்தவர் யார்? (வி.பாபு, வந்தவாசி)
டி.ராஜேந்தரை விட, பாக்யராஜ் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்!
***
தமிழ் பட உலகின் பிரபல கதாநாயகர்கள் மற்றும் அதிக படங்களில் நடித்து நிறைய சம்பாதித்தவர்கள் அனைவருக்கும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் படப்பை ஆகிய இடங்களில் சொந்தமாக தோட்டங்கள் உள்ளன. அப்படி ஒரு தோட்டம் வடிவேலுவுக்கும் இருப்பதாக கூறப்படுகிறதே...அது உண்மையா? (பி.தனசேகர், கோபிசெட்டிப்பாளையம்)
உண்மைதான். வடிவேலுவுக்கு படப்பையில் சொந்தமாக தோட்டம் இருக்கிறது!
***
குருவியாரே, மும்பை அழகிகளான தமன்னா, சிருஷ்டி டாங்கே ஆகிய இருவரும் தோழிகளா? இரண்டு பேரும் இணைந்து நடித்து இருக்கிறார்களா? (ஏ.கே.விஜயன், பனைமரத்துப்பட்டி)
இருவரும் ‘தர்மதுரை’ என்ற படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அந்த படத்தின் படப்பிடிப்பில் தொடங்கிய நட்பு, இருவரிடையே இன்னமும் தொடர்கிறதாம்!
***
யோகி பாபுவின் இடத்தை எப்படியாவது பிடிக்க ரோபோ சங்கர் படாதபாடு படுகிறாராமே...? (வி.காதர்கான், பூந்தமல்லி)
இரண்டு பேருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி இருந்து வருகிறது!
***
Related Tags :
Next Story