செல்போனில் கொரோனா விழிப்புணர்வு: ‘காலர் டியூன்’ இருமலை நீக்க மாதவன் வற்புறுத்தல்


செல்போனில் கொரோனா விழிப்புணர்வு:   ‘காலர் டியூன்’ இருமலை நீக்க மாதவன் வற்புறுத்தல்
x
தினத்தந்தி 11 March 2020 4:30 AM IST (Updated: 10 March 2020 11:22 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விழிப்புணர்வு காலர் டியூனில் ஆரம்பத்தில் வரும் இருமல் சப்தத்தை நீக்கிவிடுங்கள் என்று நடிகர் மாதவன் கேட்டுக்கொண்டார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டு, உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மத்திய சுகாதார துறை இந்தியா முழுவதும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்த அனைத்து செல்போன்களிலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ‘காலர் டியூன்’ வைத்து உள்ளது.

செல்போனில் அழைப்பவர்களுக்கு முதலில் இருமல் சப்தம் கேட்கிறது. பின்னர் இருமும்போதும், தும்மும்போதும் முகத்தை மறைத்து கொள்ளவும். முகத்தை தொடுவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றெல்லாம் ஆங்கிலத்தில் குரல் ஒலிக்கிறது.

நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “மற்றவர்களுக்கு போன் செய்யும்போது முதலில் இருமல் சப்தம் கேட்பது மிரட்சியாக உள்ளது. இது மத்திய சுகாதார துறையின் விழிப்புணர்வு பிரசாரம் என்பது பிறகு தெரியவருகிறது. இது சிறப்பான பணி. ஆனால் ஆரம்பத்தில் வரும் இருமல் சப்தத்தை நீக்கிவிடுங்கள். நான் போனில் அழைக்கும் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

நடிகர் விவேக் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழகத்தில் வெயிலில் கொரோனா வைரஸ் அழிந்துவிடும். ஆனாலும் பாதுகாப்பாக மக்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இருமும்போதும் தும்மும்போதும், வாயையும் மூக்கையும் மூட வேண்டும். கைகுவித்து வணக்கம் சொல்லும் நமது பண்டைய பழக்கம் எவ்வளவு ஆரோக்கியமான கலாசாரம் என்பது இப்போது புரிகிறது” என்று கூறியுள்ளார்.

Next Story