கண் குறைபாட்டை கேலி செய்தனர் - டைரக்டர் செல்வராகவன்
சிறுவயதில் தனது கண் குறைபாட்டை பலர் கேலி செய்ததாக டைரக்டர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
காதல் கொண்டேன் படம் மூலம் டைரக்டராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தவர் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம், என்.ஜி.கே ஆகிய படங்கள் இவரது இயக்கத்தில் வந்தன.
இந்தநிலையில் சிறுவயதில் தனது கண் குறைபாட்டை பலர் கேலி செய்ததாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான கடிதத்தை வெளியிட்டுள்ளார் செல்வராகவன். இளம் வயதில் இருக்கும் தனக்கு, இப்போதுள்ள செல்வராகவன் அறிவுரை சொல்வதுபோன்று அந்த கடிதத்தை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“அன்புள்ள செல்வா(வயது 14). உனது தோற்றத்தை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது. காரணம் நீ ஒரு மாற்றுத்திறனாளி. உனது ஒரு கண் பார்வையில் குறைபாடு உள்ளது. நீ எங்கு சென்றாலும் மக்கள் வேடிக்கை பார்த்தனர். கேலி செய்தார்கள். இதனால் ஒவ்வொரு இரவும் நீ அழுதாய். ஏன் என் கண்ணை பறித்தாய்? என்றும் கடவுளிடம் கேட்கிறாய். கவலைப்படாதே செல்வா இன்னும் 10 வருடங்களில் பெரிய வெற்றி படத்தை கொடுப்பாய்.
உனது வாழ்க்கை மாறும். கேலி செய்த இதே உலகம் உனக்கு மரியாதை கொடுக்கும். உன்னை மக்கள் ஜீனியஸ் என்று அழைப்பார்கள். அப்போது உன் கண்ணை பார்க்க மாட்டார்கள். எனவே மகிழ்ச்சியாக இரு”.
இவ்வாறு கூறியுள்ளார்.
Related Tags :
Next Story