பொன்மகள் வந்தாள் படத்தை இணையதளத்தில் வெளியிடுவது ஏன்? - நடிகை ஜோதிகா விளக்கம்
பொன்மகள் வந்தாள் படத்தை இணையதளத்தில் வெளியிடுவது குறித்து நடிகை ஜோதிகா விளக்கமளித்துள்ளார்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம், தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி வருகிற 29-ந்தேதி இணையதளத்தில் வெளியாகிறது. இந்த படம் குறித்து ஜோதிகா அளித்துள்ள பேட்டி வருமாறு:-
‘பொன்மகள் வந்தாள்’ சமூக அக்கறை உள்ள திகில் படம். இதில் பார்த்திபன், பாக்யராஜ், தியாகராஜன் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். நீளமான வசனம் பேசி நடித்துள்ளேன். அது சவாலாக இருந்தது. முந்தைய படங்களை விட அதிக உழைப்பை கொடுத்துள்ளேன். கதை என் மனதுக்கு நெருக்கமானதாக உள்ளது.
இதில் வெண்பா என்ற பெயரில் ஊட்டியில் உள்ள ஒரு சிறிய நீதிமன்றத்தின் வக்கீலாக நடித்துள்ளேன். இந்த படத்துக்கு நானே டப்பிங் பேசி இருக்கிறேன். 20 ஆண்டுகள் கழித்தும் எனது படங்கள் பேசப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்து கதைகளை ஒப்புக்கொள்கிறேன். என் படங்களை பெண்கள் பார்க்கும்போது பெருமையாக நினைக்க வேண்டும். சமூக அக்கறை உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன். வணிக படங்களில் இருந்து வெளியே வந்து விட்டேன்.
இப்போது நிறைய பேருக்கு ‘ஓ.டி.டி.’ டிஜிட்டல் தளம் தெரிந்துள்ளது. 3 மாதங்களாக வீட்டில் இருந்துதான் படம் பார்க்கிறார்கள். திரையரங்கில் வெளியிடும்போது அனைத்து தரப்பு மக்களும் பார்ப்பார்கள் என்பதை மறுக்கவில்லை. கொரோனாவால் மட்டுமே இந்த படத்தை ‘ஓ.டி.டி.’ தளத்தில் வெளியிடுகிறோம். நடிகர்கள், இயக்குனர்களுக்கு திரையரங்கம் ஒரு கொண்டாட்டம்தான். ‘ஓ.டி.டி.’ தளம் கதையை மையமாக கொண்ட படங்களுக்கு அருமையான தளம் என்று நினைக்கிறேன்.
பெண்களை மையமாக கொண்ட படங்களுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் வரவு குறைவுதான். அதில் பலர் ஆண்கள்தான். எனவே அத்தகைய படங்களுக்கு டிஜிட்டல் தளத்தில் வரவேற்பு இருக்கிறது. சினிமாவின் அடுத்த கட்டம்தான் ‘ஓ.டி.டி.’ கதாநாயகனை ஒப்பிடும்போது கதாநாயகிகளின் படங்களை பார்க்க ரசிகர்கள் அதிகம் செல்ல மாட்டார்கள். ‘ஓ.டி.டி.’ மூலம் எனது படம் அதிக ரசிகர்களை சென்று அடையும்.
கொரோனா பிரச்சினை முடிந்ததும், நிறைய கதாநாயகர்கள் படங்கள் தியேட்டர்களில் ரிலீசாக காத்து இருக்கின்றன. அப்படி இருக்கும்போது ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வெளியிடுவதற்கு 2 வருடங்கள் ஆகி விடும். அதனால்தான் இணையதளத்தில் வெளியிடுகிறோம் என்று ஜோதிகா கூறினார்.
Related Tags :
Next Story