தனுசுடன் நடிக்க வைப்பதாக பண மோசடி
தனுசுடன் நடிக்க வைப்பதாக பண மோசடி நடைபெற்றுள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வந்தன. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடிக்கிறார். ஜகமே தந்திரம் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. ஒரு இந்தி படமும் கைவசம் வைத்துள்ளார். அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கார்த்திக் நரேன் ஏற்கனவே துருவங்கள் பதினாறு, மாபியா ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர். கொரோனா ஊரடங்கு முடிந்தும் தனுஷ் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இது தனுசுக்கு 43-வது படம் ஆகும். இந்த படத்தில் தனுசுடன் நடிக்க போலியாக நடிகர்கள் தேர்வை நடத்தி பண மோசடி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கார்த்திக் நரேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“எனது பெயரை பயன்படுத்தி ஒரு வாட்ஸ் அப் நம்பரின் முலம் போலியான நடிகர் தேர்வை ஒரு நபர் நடத்தி வருவதாகவும் அவர்களிடம் இருந்து எனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக சொல்லி பணம் வசூல் செய்வதாகவும் கவனத்துக்கு வந்துள்ளது. அவரிடம் யாரும் ஏமாற வேண்டாம். அவர் மீது புகார் செய்யுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story