22 மொழிகளில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ மொழிபெயர்ப்பு - கவிஞர் வைரமுத்து பெருமிதம்


22 மொழிகளில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ மொழிபெயர்ப்பு - கவிஞர் வைரமுத்து பெருமிதம்
x
தினத்தந்தி 18 Sep 2021 9:10 PM GMT (Updated: 18 Sep 2021 9:10 PM GMT)

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவல் இந்தியாவின் 22 மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படுகிறது.

சென்னை, 

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 2003-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது. இன்றைய தேனி மாவட்டத்தின் வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் வாழ்வியல்தான் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. மூழ்கிப்போன 14 ஊர்களில் ஓர் ஊரான மெட்டூர்தான் கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர் ஆகும்.

‘தண்ணீரில் மூழ்கிப்போன ஊர்களும், கண்ணீரில் மூழ்கிப்போன மக்களும்‘ என்று தன் நாவலின் சுருக்கத்தை உணர்ச்சி மயமாக கவிஞர் வைரமுத்து சொல்வார்.

சுதந்திர இந்தியாவில் நேர்ந்த சுற்றுச்சூழல் துயரம் என்பதால் இது ஒருதேசியப் படைப்பு என்று கருதிய ‘சாகித்ய அகாடமி’ கள்ளிக்காட்டு இதிகாசத்தை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கத் திட்டமிட்டது. பரிசு பெற்ற ஒரு படைப்பு 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

அதன் முதல்கட்டமாக இந்தி, மலையாளம், உருது, கன்னடம் என்ற 4 மொழிகளின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. எச்.பாலசுப்ரமணியம் இந்தியிலும், கி.வெங்கிடாசலம் மலையாளத்திலும், ஹயாத் இப்தகர் உருதிலும், கே.மலர்விழி கன்னடத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

எல்லா மொழிகளிலும் குறிப்பாக இந்தி மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு பெரும் வரவேற்பு இருப்பதாகவும், மற்ற மொழிகளின் மொழிபெயர்ப்புகள் விரைவாக நடந்தேறி வருவதாகவும் ‘சாகித்ய அகாடமி’யின் செயலாளர் டாக்டர் சீனிவாசராவ் தெரிவித்துள்ளார்.

இகுறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில் ‘தமிழர்களின் வீரமும் ஈரமும், துயரமும் உயரமும் இந்திய மக்களால் எல்லா மொழிகளிலும் உணரப்படுவது பெருமிதம் தருகிறது’ என்றார்.

Next Story