கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன்... 40 கதைகளை நிராகரித்த அஸ்வின்குமார்...


கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன்... 40 கதைகளை நிராகரித்த அஸ்வின்குமார்...
x
தினத்தந்தி 8 Dec 2021 6:53 AM GMT (Updated: 8 Dec 2021 6:53 AM GMT)

அஸ்வினை இயக்கிய போது தான் ஒரு சூப்பர்ஸ்டாரை இயக்கியது போல் உணர்ந்ததாக இயக்குனர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்

சென்னை ,

குக் வித் கோமாளி மற்றும் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் அஸ்வின்.இவர் தற்போது  ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.இதில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த இசை வெளியிட்டு விழாவில் பேசிய அஸ்வின் கூறியதாவது :

ரசிகர்களின் அன்பால்தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்புதான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன். ஆனால், இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை.‘என்ன சொல்ல போகிறாய்’ படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையைப் பிரிக்கலாம். ஒரு தனியார் தொலைக்காட்சி என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்திருக்கிறது. ஒரு காமெடி நிகழ்ச்சி  இவ்வளவு பெரிய பிரபலம் தரும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப் படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன்.

என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான். இயக்குநர் ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார்.‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தை நீங்கள் பார்த்துக் கொண்டாடுவதைக் காண ஆவலாக இருக்கிறேன். இந்தப் படம் பல பேரின் கனவு. கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன்''.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் பேசிய வார்த்தைகள் தற்போது இணையத்தளத்தில் அதிக நபர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. முன்னணி நடிகர்களே ஒரு சில கதைகள் கேட்ட பிறகு நடிக்கும் சூழலில் ,முதல் படத்தில் நடிப்பதற்கு முன்னரே 40 கதைகளை அஸ்வின் நிராகரித்திருப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தின் இயக்குனர் ஹரிஹரன் பேசும்போது "அஸ்வினை இயக்கிய போது தான் ஒரு சூப்பர்ஸ்டாரை இயக்கியது போல் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்". இதற்கும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Next Story