மூன்று பாகமாக உருவாகும் ‘பிரமாஸ்திரா’


மூன்று பாகமாக உருவாகும் ‘பிரமாஸ்திரா’
x
தினத்தந்தி 21 Dec 2021 3:10 PM IST (Updated: 21 Dec 2021 3:10 PM IST)
t-max-icont-min-icon

‘பிரமாஸ்திரா’படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக திரைப்படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புராணக் காலத்தையும், நவீன யுகத்தையும் இணைக்கும் வகையிலான ஒரு பேண்டசி கதையாக உருவாகி வருகிறது, ‘பிரமாஸ்திரா’ திரைப்படம். இந்தப் படத்தை பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார். இவர் இயக்கும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.

இதற்கு முன்பு 2009-ல் அயன் முகர்ஜி இயக்கிய ‘வேக் அப் சிட்’, 2013-ம் ஆண்டு வெளிவந்த ‘யே ஜவானி ஹே தீவானி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நகைச்சுவை, குடும்ப திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தன. இந்த நிலையில் அந்த ஜானரில் இருந்து மாறுபட்ட ஒரு திரைப்படமாக ‘பிரமாஸ்திரா’ திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தனக்குள் வைத்திருந்ததாக சொல்லியிருக்கிறார்.

இந்தப் படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக திரைப்படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் ‘பிரமாஸ்திரா - பார்ட் ஒன்: சிவா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அடுத்த ஆண்டு (2022) செப்டம்பர் 9-ந் தேதி வெளியாக உள்ளது. இதில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகர்ஜுனா, டிம்பிள் கபாடியா போன்ற நட்சத்திர பட்டாளத்துடன் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கானும் நடிக்கிறார்.

முதல் பாகம் சுமார் ரூ.300 கோடியில் பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் முதல் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இதில் கையில் திரிசூலம் ஏந்தியபடி இருக்கும் பிரமாண்டமான சிவன் சிலையின் முன்பாக, தனது கையிலும் திரிசூலத்தை பிடித்தபடி ரன்பீர் கபூர் நிற்பது போன்ற காட்சி வெளியிடப்பட்டது. இது பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாது, இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

Next Story