பரபரப்பை ஏற்படுத்திய தனுசின் புதிய தோற்றம்
டைரக்டர் அருண் மாதேஸ்வரனுடன் இணையும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ், தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில், ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை வெங்கட் அட்லூரி இயக்குகிறார். தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் படத்துக்கு பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
அதனைத்தொடர்ந்து ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய இளம் டைரக்டர் அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் இணைகிறார். 1930-களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘கேங்க்ஸ்டர்’ பாணியில் தயாராகும் இந்தப் படத்துக்கு, ‘கேப்டன் மில்லர்’ என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
‘கேப்டன் மில்லர்’ படத்தின் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சிப்பாய் உடையுடன் தனுஷ் தோன்றும் படம், ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தற்போது தனுஷ் நடித்து வரும் ‘நானே வருவேன்’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படமும் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.
Related Tags :
Next Story