25 ஆண்டுகளுக்கு முன்... மகனின் தற்கொலையை தடுக்க முயன்று தோல்வி; பிரபல நடிகரின் சோக நினைவலைகள்


25 ஆண்டுகளுக்கு முன்... மகனின் தற்கொலையை தடுக்க முயன்று தோல்வி; பிரபல நடிகரின் சோக நினைவலைகள்
x

பிரபல நடிகர் கபீர் பேடி அவரது மகனின் தற்கொலையை தடுக்க முயன்றும் முடியாமல் போன சோக நினைவலைகளை பகிர்ந்து உள்ளார்.


புதுடெல்லி,


இந்தி திரையுலகில் பிரபல நடிகராக அறியப்படுபவர் கபீர் பேடி. 1971-ம் ஆண்டு பாலிவுட்டில் நுழைந்த அவர், 1980-ம் ஆண்டுகளில் ரசிகர்கள் இடையே பிரபலம் அடைய தொடங்கினார்.

டெல்லியில் நடந்த, ஸ்டோரீஸ் ஐ மஸ்ட் டெல் என்ற சுயசரிதை புத்தக அறிமுக விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டார். அந்த புத்தகத்தில் அவரது வாழ்க்கையில் நடந்த ஏற்ற, இறக்கங்கள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது நடந்த விவாதத்தில் கபீர் பேடி தனது கடந்த கால சோக நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறும்போது, நிதி சார்ந்த பின்னடைவு ஒருபுறம். மகனின் ஸ்கைசோபிரீனியா பாதிப்பு மறுபுறம் என இரண்டும் ஒரு சேர எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

புத்தகத்தில் வெற்றி, தோல்வி நினைவலைகளை சேர்க்க விரும்பினேன். வாழ்வின் இந்த பகுதியை குறிப்பிடும் கட்டாயத்தில் இருந்தேன். இந்த புத்தகத்தில் என்ன எழுதியுள்ளேனோ அது என்னுடைய மனதில் இருந்து வந்தது என கூறியுள்ளார்.

எனது சோகங்களை விரிவாக விவரித்து உள்ளேன். ஒருவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. ஏனெனில் நான் எழுதியது உண்மை. அவர்களும் அதனை அறிவார்கள். அதில், மறைப்பதற்கு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

இவரது மகன் சித்தார்த். ஸ்கைசோபிரீனியா நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள், தீவிர மனநிலை பாதிக்கப்பட்டும், இல்லாத விசயங்களை இருப்பது போல் பார்த்தும், பேசியும் வருவதுடன், ஒழுங்கற்ற எண்ணம், செயல்பாடு மற்றும் நீண்டகால சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருந்திடுவார்கள்.

இந்த சூழலிலேயே அவரது மகன் கடந்த 1997-ம் ஆண்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி குறிப்பிட்ட கபீர், தவறான முதலீடுகளால் இழப்புகள் ஏற்பட்டது. சித்தார்த் தற்கொலை செய்தபோது, அதனை தடுக்க முயன்றும் அது முடியாமல் போனதில் குற்ற உணர்வுடன் உள்ளேன்.

அந்த சூழலில் நிதி நெருக்கடியிலும் சிக்கினேன். ஆடிசனுக்கு போக வேண்டும். அதனால், என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாத சூழலில் தள்ளப்பட்டேன். இதனால், பல வேலைகள் கைவிட்டு போய்விட்டன. உணர்வுரீதியாக உடைந்து போனேன்.

அதில் இருந்து, என்னை நானே மீண்டும் கட்டமைத்தது எல்லாம் எனது வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதி என குறிப்பிட்டு உள்ளார்.

நடிகர் கபீர் பேடிக்கு முதல் மனைவி புரோத்திமா குப்தா வழியே பிறந்தவர் சித்தார்த். கார்னெகி மெல்லான் பல்கலை கழகத்தில் படித்து வந்த சித்தார்த்துக்கு பின்னாளில் நோய் பாதிப்பு ஏற்பட்டது. 26 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை பர்வீன் பாபியுடன் ஏற்பட்ட காதலால் புரோத்திமாவை பிரிந்து சென்றுள்ளார். இதுபற்றியும் புத்தகத்தில் கபீர் தெரிவித்து உள்ளார். எனினும், மனநிலை பாதிப்புக்கு ஆளான பர்வீன், தனது 50 வயதில் மரணம் அடையும் வரை அதில் இருந்து மீளவில்லை. உதவி செய்ய சென்றாலும் அதற்கு அனுமதிக்காமல் பர்வீன் தடுத்து விடுவார் என கபீர் கூறியுள்ளார்.

கபீர், பின்பு பர்வீன் துசான்ஜ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பு அவரது மனைவி நிக்கி பேடியிடம் இருந்து கபீர் பிரிந்து விட்டார்.


Next Story