நடிகை திவ்யா புகார் எதிரொலி... படப்பிடிப்பு தளத்தில் சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது..!


நடிகை திவ்யா புகார் எதிரொலி... படப்பிடிப்பு தளத்தில் சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது..!
x
தினத்தந்தி 14 Oct 2022 5:58 PM IST (Updated: 14 Oct 2022 6:12 PM IST)
t-max-icont-min-icon

சின்னத்திரை நடிகர் அர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராகாததால் மாங்காடு போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

'செவ்வந்தி' என்னும் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா. இவரும், மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செல்லம்மா' தொடரில் நடித்து வரும் நடிகர் அரணவ்வும் ஏற்கனவே ஒரு தொடரில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

இருவரும் ஒரே வீட்டில் 2 வருடங்களாக சேர்ந்து வசித்து வந்தனர். இந்த நிலையில் தனது கணவர் அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும் கூறி நடிகை திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அடித்து துன்புறுத்தியாக அவர் அளித்த புகாரில் போருர் அனைத்து மகளிர் போலீசார் அரணவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த புகார் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை போலீசார் தெரிவித்தும் அரணவ் விசாரணைக்கு ஆஜராகாததால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

போலீசார் அனுப்பிய சம்மனை அரணவ் பெற்று கொண்டதாகவும் குறிப்பாக பதிவு தபால் மற்றும் செல்போனிலும் அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனை அவர் பெற்று கொண்ட நிலையில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அவருக்கு பதிலாக அவரது வக்கீல்கள் மாங்காட்டில் உள்ள போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டரிடம், அரணவிற்கு கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதன் காரணமாக அவர் விசாரணைக்கு ஆஜராவதில் கால அவகாசம் வேண்டும் எனவும், வரும் 18 ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என விளக்க கடிதம் கொடுத்தனர். இதை போலீசார் ஏற்க மறுத்தனர்.

மேலும் அரணவ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான சான்றுகள் ஏதும் தராததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது "சுவிட்ச் ஆப்" என வந்தது.

அர்ணவ் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து போரூர் உதவி கமிஷனர் ராஜுவ் பிரின்ஸ் ஆரோண், இன்ஸ்பெக்டர் ராஜி, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் இருந்த அவரை அதிரடியாக கைது செய்தனர். போலீசார் வருவதை சற்றும் எதிர்பாராமல் இருந்த அரணவ் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதையடுத்து அரணவை மாங்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஏன் நாடகமாடி விட்டு படபிடிப்பிற்கு சென்றார் என போலீசார் சாரமாரியாக அரணவிடம் கேள்வியை எழுப்பினார்கள்.

விசாரணைக்கு ஆஜராகாமல் நாடகமாகமாடி விட்டு படப்பிடிப்பில் இருந்த சின்னத்திரை நடிகர் அர்ணவை படப்பிடிப்பு தளத்தில் வைத்தே போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story