மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்


மாரடைப்பால் உயிரிழந்த  நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்
x
தினத்தந்தி 30 March 2024 4:09 AM GMT (Updated: 30 March 2024 8:03 AM GMT)

நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டன.

சென்னை,

'காக்க காக்க' படத்தில் வில்லனாக நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் டேனியல் பாலாஜி(வயது 48). தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, பிகில் என பல ஹிட் படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த டேனியல் பாலாஜியின் உடல் அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மாள் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அவரது உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக நடிகர் டேனியல் பாலாஜி தனது கண்களை தானம் செய்திருந்தார். புரசைவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கே சென்ற மருத்துவர்கள் கண்களை தானம் பெற்றனர். தொடர்ந்து இன்று மாலை அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.


Next Story