'ஹிட்லிஸ்ட்' படத்தின் முதல் பாடலை வெளியிட்ட நடிகர் சூர்யா


இயக்குநர் விக்கிரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிகராக அறிமுகமாகும் படத்தின் முதல் பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குநர் மற்றும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகி உள்ள படம் 'ஹிட்லிஸ்ட்'. முன்னதாக இந்த நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் நடித்த 'தெனாலி' மற்றும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'கூகுள் குட்டப்பா' ஆகிய திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றிய அன்பிற்காக அவர் இந்த படத்தை தயாரித்துள்ளதாக ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

இயக்குநர்கள் சூர்யகதிர் மற்றும் K.கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அபிநயா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும், 'ஹிட்லிஸ்ட்' படத்திற்கு 'எங்கேயும் எப்போதும்' புகழ் சத்யா இசையமைக்க, ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஜான் ஆபிரகாம் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர்துரை கவனிக்கிறார். சண்டை காட்சிகளை விக்கி மற்றும் பீனிக்ஸ் பிரபு இயக்குகின்றனர்.

முன்னதாக, சில மாதங்களுக்கு முன்பு படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் 'ஐ ஆம் தி டேஞ்ஜர்' என்ற பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இந்த படம் காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகள் என அனைத்து மக்களையும் கவரும் வகையில் இருக்கும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் 'உன்னை நினைத்து' படத்திலும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் 'ஆதவன்' திரைப்படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story