சீக்கிய முறைப்படி நடந்த நடிகை ரகுல் பிரீத்-ஜாக்கி பக்னானி திருமணம்


சீக்கிய முறைப்படி நடந்த நடிகை ரகுல் பிரீத்-ஜாக்கி பக்னானி திருமணம்
x

திருமணத்திற்கு முன்னான நிகழ்ச்சிகள் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன.

பனாஜி,

தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். என்.ஜி.கே படத்தில் சூர்யாவுடன் நடித்து இருந்தார். என்னமோ ஏதோ, தேவ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அயலான் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த அவர் இந்தியிலும் தடம் பதித்து உள்ளார். நடிகர்கள் அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன் உள்ளிட்டோருடன் சேர்ந்து நடித்துள்ளார். துருதுருவென்ற நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த நடிகை ரகுல் பிரீத் சிங்குக்கு ஜாக்கி பாக்னானி என்ற காதலர் இருக்கிறார்.

ரகுல் பிரீத் மற்றும் ஜாக்கி பாக்னானி இருவரும் 2020-ம் ஆண்டு முதல் காதல் ஜோடிகளாக உலா வந்தனர். பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று வந்தனர். 2021-ம் ஆண்டிலேயே இந்த ஜோடி தங்களுக்கு இடையேயான உறவை உறுதி செய்தது. அதன்பின் தங்களுக்கு இடையேயான இனிமையான தருணங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்தது. பொதுவெளியிலும் அவர்கள் ஒன்றாக தோன்றினர்.

ராணுவ குடும்ப பின்னணியில் இருந்து வந்த ரகுல் பிரீத், உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதற்காக, ரகுல் தனியாக 3 உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் தெரிய வந்த நிலையில், அடுத்து திருமணம் எப்போது? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதுபற்றி நீண்ட நாட்களாக ரகுல் பிரீத் எதுவும் கூறாமல் இருந்த நிலையில், சமூக ஊடகத்தில் அதுபற்றிய பல புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகின.

இதன்படி, இந்த ஜோடியின் திருமணம் இன்று நடைபெறும் என உறுதியானது. கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

திருமணத்திற்கு முன்னான நிகழ்ச்சிகள் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஆனந்த் கராஜ் என்ற பெயரிலான சீக்கிய முறைப்படி இவர்களின் திருமணம் இன்று நடந்தது. இதில், இந்த ஜோடிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர்கள் அர்ஜுன் கபூர், வருண் தவான் மற்றும் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, ஈஷா தியோல் உள்ளிட்டோர் இந்த தம்பதியின் புதிய பயணத்திற்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். ரசிகர்களும் திருமணத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை இருவருக்கும் இந்து முறைப்படியும் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

ரகுல் பிரீத் சிங், இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இதேபோன்று, காதலர் ஜாக்கி, அவருடைய தயாரிப்பில் உருவாகும் படே மியான் சோட்டே மியான் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இதில், அக்சய் குமார், சோனாக்சி சின்ஹா, பிருத்விராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களையேற்று நடித்துள்ளனர்.

1 More update

Next Story