அரவிந்த் சாமி நடித்துள்ள 'ரெண்டகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


அரவிந்த் சாமி நடித்துள்ள ரெண்டகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x

நடிகர் அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து நடித்துள்ள 'ரெண்டகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த் சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவர், சில வருடங்களாக நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் 'கடல்' படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.

இந்த நிலையில் அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ரெண்டகம்'. மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் 'ரெண்டகம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் மலையாளத்தில் 'ஒட்டு' என்ற பெயரில் வெளியாகிறது.

இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெலினி டிபி இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

முதலில் செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்த படம் சென்சார் பணி காரணமாக செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'ரெண்டகம்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 23 தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story