பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது


பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது
x

பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி

சினிமா துறையில் சிறந்த சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கபட்டு வருகிறது. இந்திய திரை உலகினருக்கு கிடைக்கும் கவுரவ விருதாகவும் வாழ்நாள் அங்கீகாரமாகவும் இந்த விருது கருதப்படுகிறது.

சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி. பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், கே. விஸ்வநாத் உள்ளிட்ட பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது மேலும் பெருமை சேர்த்துள்ளது.

இந்நிலையில் பாலிவுட்டில் 1960, 1970களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஜராத்தைச் சேர்ந்த 79 வயது ஆஷா பரேக். அவருக்கு 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார்.

1952 முதல் 1999 வரை நடித்துள்ளார். 1992-ல் ஆஷா பரேக்குக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கடந்த வருடங்களில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், வினோத் கன்னா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ஷம்மி கபூருக்கு ஜோடியாக தில் தேகே தேகோ (1959) என்ற திரைப்படத்தில் ஆஷா அறிமுகமானார். முன்னதாக ஆஷா மா (1952) மற்றும் பாப் பேட்டி (1954) ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி உள்ளார்.

ஜப் பியார் கிசி சே ஹோதா ஹை (1961), தீஸ்ரி மன்சில் மற்றும் தோ படன் (1966), கடி படங் (1970), கேரவன் (1971), மற்றும் மெயின் துளசி தேரே ஆங்கன் கி (1978) கி படோசன் மற்றும் பாக்யவான் (1993), கர் கி இஸத் (1994) மற்றும் அந்தோலன் (1995) உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.


Next Story