'அயலான்' ரசிகர்களுக்கு நெருக்கமானவன்- சினிமா விமர்சனம்


அயலான் ரசிகர்களுக்கு நெருக்கமானவன்- சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 15 Jan 2024 3:26 AM GMT (Updated: 15 Jan 2024 4:38 AM GMT)

கிளைமாக்ஸ் காட்சியில் ஏலியனோடு தோளோடு தோள் சேர்த்து சண்டையிடும் காட்சி ரசிக்க வைக்கிறது.

கொடைக்கானலில் தன் அம்மாவுடன் வசிக்கும் சிவகார்த்திகேயன் இயற்கையையும் விலங்குகளையும் நேசிக்கிறார்.

ஒரு கட்டத்தில் வேலை தேடி சென்னைக்கு வருகிறார். அப்போது வேற்று கிரகத்தில் இருந்து விழுந்த அரிதான கனிமத்தை பயன்படுத்தி மனித இனத்துக்கு கேடு செய்யும் திட்டத்தை தொடங்குகிறான் வில்லன். அந்த கனிம பொருளை தேடி ஏலியன் பூமிக்கு வந்து சிவகார்த்திகேயனோடு நட்பு கொள்கிறது.

வில்லனால் ஏலியனுக்கு ஆபத்து வருகிறது. ஏலியனை காப்பாற்றவும், வில்லன் சதித்திட்டத்தை முறியடிக்கவும் சிவகார்த்திகேயன் போராடுகிறார். அது நடந்ததா என்பது மீதி கதை.சிவகார்த்திகேயன் ஹீரோயிசம் இல்லாத யதார்த்தமான நடிப்பில் கலக்கி இருக்கிறார். இயற்கை மீது பரிவு, அம்மா மீது பாசம், நண்பர்களுடன் ஜாலி அரட்டை, காதலியிடம் கொஞ்சல், வில்லனை வில்லாக வளைத்து பந்தாடுவது என படம் முழுக்க ரசிகர்களை கட்டிப் போடும் மந்திரத்தை வழக்கம்போல் ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்.


கிளைமாக்ஸ் காட்சியில் ஏலியனோடு தோளோடு தோள் சேர்த்து சண்டையிடும் காட்சி ரசிக்க வைக்கிறது. ரகுல்ப்ரீத் சிங் துடுக்காக நடித்து தன் இருப்பை காட்டிக் கொள்கிறார். அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம்.

யோகி பாபு, கருணாகரன் கூட்டணி காமெடிக்கு கியாரண்டி.நீண்ட நாட்களுக்கு பிறகு பானுப்பிரியா திரையில் தோன்றினாலும் மங்காத அவருடைய நடிப்பு அருமை.ஷரத் கேல்கர் ஸ்டைலீஷ் நடிப்பில் ஹைடெக் வில்லன் வேடத்துக்கு பெருமை சேர்க்கிறார்.

இஷா கோபிகர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புகிறார். ஏலியனுக்கு சித்தார்த் கொடுத்துள்ள குரல் பக்கபலம்.பூம்பாறை கிராமம், வில்லனின் ஆய்வகம், ஹீரோவின் நண்பர் வீடு என ஒவ்வொரு தளத்திலும் வித்தை காட்டி உள்ளது நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு.ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் தனி ரகம். பின்னணி இசையிலும் பிரமாதமான இசைக்கோர்வையால் மிரட்டி இருக்கிறார்.படத்தின் ஆரம்ப காட்சிகளின் நீளம் தொய்வாக இருந்தாலும் அதன்பிறகு வேகமெடுத்து கதையோடு ஒன்ற செய்கிறது.

இயற்கை வளம் காப்போம், மனிதர்களை நேசிப்போம் என்ற எளிய கதைக் கருவை ஏலியன், கார்ப்பரேட் உலகம், காதல், நட்பு என்று பல அம்சங்களுடன் சேர்த்து ரசிக்கும்படியாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.சமூக விஷயங்களை ஆங்காங்கே உதிர்த்து யோசிக்க வைத்து இருப்பது பாராட்டுக்குரியது


Next Story