விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் உட்கொண்ட வழக்கு; நடிகர் சித்தாந்த் கபூர் ஜாமீனில் விடுதலை


விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் உட்கொண்ட வழக்கு; நடிகர் சித்தாந்த் கபூர் ஜாமீனில் விடுதலை
x

விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் உட்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.



பெங்களூரு,



கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கும் சொகுசு ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அதில் விருந்தில் போதை பொருள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, சிலரை கைது செய்து, சோதனைக்காக அவர்களின் ரத்தமாதிரி எடுக்கப்பட்டது. 35 பேரில் 5 பேர் போதை பொருள் பயன்படுத்தியது ரத்த பரிசோதனையில் தெரிய வந்தது. அதில் பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூரும் ஒருவர்.

போலீசார் சித்தாந்த் கபூரை கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் தான் சித்தாந்த். பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சித்தாந்தின் சகோதரி ஆவார். முன்னதாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது இந்தி திரையுலகை சேர்ந்த பலரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் ஷ்ரத்தா கபூரும் ஒருவர். ஆனால் அவருக்கு எதிராக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

பெங்களூரு ஓட்டலில் நடந்த போதை விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், போதை பொருட்களை உட்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுபற்றி பெங்களூரு நகர கிழக்கு டி.சி.பி. பீமசங்கர் எஸ் குலெட் செய்தியாளர்களிடம் கூறும்போது, சித்தாந்த் கபூர் போதை பொருட்களை எடுத்துள்ளார் என மருத்துவ பரிசோதனை உறுதிப்படுத்தி உள்ளது.

அவரை முன்பே கைது செய்து, அதன் பின்னரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என நேற்று கூறினார். தொடர்ந்து அவரை காவலுக்கு எடுத்து விசாரிக்க இருக்கிறோம் என கூறினார். இந்நிலையில் அவர் கூறும்போது, காவல் நிலைய ஜாமீன் அடிப்படையில் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேரை விடுவித்து உள்ளோம். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு அழைப்பு விடப்படும். அதன்பேரில் அவர்கள் நேரில் ஆஜராவார்கள் என்று குலெட் கூறியுள்ளார்.


Next Story