நாட்டு நாட்டு பாடல்... ஆனந்த் மகிந்திராவுக்கு ஸ்டெப் கற்று கொடுத்த நடிகர் ராம்சரண்


நாட்டு நாட்டு பாடல்... ஆனந்த் மகிந்திராவுக்கு ஸ்டெப் கற்று கொடுத்த நடிகர் ராம்சரண்
x

தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவுக்கு நாட்டு நாட்டு பாடலுக்கு ஸ்டெப் போடுவது பற்றி நடிகர் ராம்சரண் கற்று கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.



ஐதராபாத்,


தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இந்தியாவின் முதல் பார்முலா இ-ரேஸ் பந்தயம் நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் மற்றும் நடிகர் ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஆனந்த் மகிந்திரா வீடியோ ஒன்றை பதிவிட்டு, வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஐதராபாத் இ-பிரிக்ஸ் பந்தயம் தவிர்த்து எனக்கு கிடைத்த உண்மையான போனஸ் என்னவென்றால், நாட்டு நாட்டு பாடலுக்கான ஸ்டெப் எப்படி போடுவது? என்பது பற்றி நடிகர் ராம்சரணிடம் இருந்து கற்று கொண்டேன். நன்றி மற்றும் ஆஸ்கார் விருது பெறுவதற்கு வாழ்த்துகள் எனது இனிய நண்பரே! என தெரிவித்து உள்ளார்.

இதற்கு ராம்சரண் பதிலுக்கு, ஜி என்னை விட விரைவாக ஸ்டெப்களை நீங்கள் போட்டுள்ளீர்கள். உங்களுடன் உரையாடிய அந்த தருணம் மகிழ்ச்சியானது. ஆர்.ஆர்.ஆர். பட குழுவினருக்கு வழங்கிய உங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.

டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆா்ஆா்ஆா்' திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச்சில் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்.டி.ஆா். உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், மிக பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் கூடுதலாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்த திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், 'ஒரிஜினல் பாடல்' என்ற விருதின் பிரிவில் 15 பாடல்களில் ஒன்றாக இறுதி பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. ஆர்ஆர்ஆர் இன் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) குறுகிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்த பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர். ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உயரிய விருது என கருதப்படும் கோல்டன் குளோப்ஸ் விருதும் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கிடைத்து உள்ளது. பாடல் ஒன்றுக்காக ஆசிய அளவில் கோல்டன் குளோப் விருது பெறும் முதல் திரைப்படம் என்ற பெருமையும் பெற்று உள்ளது.




Next Story