செப்டம்பர் 1-ந் தேதி முதல் 'ஜெயிலர்' படத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சீருடையை காட்டக்கூடாது - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


செப்டம்பர் 1-ந் தேதி முதல் ஜெயிலர் படத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சீருடையை காட்டக்கூடாது - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x

செப்டம்பர் 1-ந் தேதி முதல் 'ஜெயிலர்' படத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சீருடையை காட்டக்கூடாது என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சமீபத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர்' படம் வெளியானது. அப்படம் தொடர்பாக, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஐ.பி.எல். அணி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அதில், ''ஜெயிலர் படத்தில் ஒரு காட்சியில் வில்லன் அடியாள் ஒருவர், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சட்டையை அணிந்துகொண்டு, பெண் கதாபாத்திரத்தை பற்றி ஆபாசமாக பேசுவதுபோல் இடம்பெற்றுள்ளது. இதனால், எங்கள் அணியின் நற்பெயர் பாதிக்கப்படுகிறது. அந்த சட்டையை காண்பிக்கும் காட்சியை நீக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு, நீதிபதி பிரதிபா சிங் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல், படத்தயாரிப்பு நிறுவனம் தங்களை அணுகி, குறிப்பிட்ட காட்சியை திருத்தி வெளியிட உறுதி அளித்ததாக தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செப்டம்பர் 1-ந் தேதி முதல், 'ஜெயிலர்' தியேட்டர் பதிப்பில், ராயல் சேலஞ்சர்ஸ் என்ற பெயரோ, வண்ணமோ, ஸ்பான்சர் நிறுவனங்களின் பெயரோ தெரியாத வகையில், அந்த காட்சியை திருத்தி வெளியிடுவதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், ஓ.டி.டி.யிலோ, டி.வி.யிலோ வெளியிடும்போது, இந்த திருத்தப்பட்ட காட்சிதான் இடம்பெற வேண்டும் என்றும் கூறினர்.


Next Story