ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது திரிஷயம்


ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது திரிஷயம்
x

‘திரிஷயம்’ மற்றும் ‘ திரிஷயம் 2’ படங்கள் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

திருவனந்தபுரம்,

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் 'திரிஷயம்'. ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்களே திரிஷயம் படத்தின் கதை. மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற இந்தப்ப டம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இரண்டாம் பாகமும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அடுத்த பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 'திரிஷயம்' மற்றும் 'திரிஷயம் 2' படங்கள் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. 2013-ல் திரிஷயம் முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்த பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் லிமிமெட் நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களான கல்ப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளது.

இதற்காக திரிஷயம் பட உரிமையை வைத்திருக்கும் மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸிடம் இருந்து சர்வதேச ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. ஒரு இந்திய திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். அந்தவகையில் திரிஷயம் சரித்திரம் படைத்துள்ளது.

ஏற்கனவே, கொரியன் மொழியில் திரிஷயம் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 10 நாடுகளின் மொழிகளில் திரிஷயம் படங்களை ரீமேக் செய்ய பனோரமா நிறுவனம் முடிவு செய்துள்ளனர்.

பனோரமா நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கத் பதக் கூறுகையில், "திரிஷயத்தின் புத்திசாலித்தனமான கதைக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. இந்தக் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் கொண்டாட நாங்கள் ஆர்வமாக உள்ளோம். கொரிய மொழியைத் தொடர்ந்து அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 10 நாடுகளில் 'திரிஷயம்' படத்தைத் தயாரிப்பதே எங்கள் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story