ஏக்தா கபூருக்கு எதிராக கைது வாரண்ட் செய்திக்கு அவரது வழக்கறிஞர் மறுப்பு


ஏக்தா கபூருக்கு எதிராக கைது வாரண்ட் செய்திக்கு அவரது வழக்கறிஞர் மறுப்பு
x

பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.



பெகுசராய்,

பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர், வலைத்தள தொடர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இதன்படி எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். சீசன் 2 என்ற பெயரில் வலைதள தொடர் ஒன்றின் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டார்.

இதில், மதஉணர்வுகள் புண்படுத்தப்பட்டு உள்ளன. ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் மற்றும் தேசிய சின்னம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுபற்றி இந்தூரில், ஏக்தா கபூர் மற்றும் பிறர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பீகாரின் பெகுசராய் நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஷாம்பு குமார் என்பவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இதேபோன்று, பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் ஆகியோருக்கு எதிராக பீகாரின் முசாபர்பூர் கோர்ட்டிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பீகாரின் பெகுசராய் கோர்ட்டு நேரில் ஆஜராகும்படி ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் இதனை புறக்கணித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது என செய்திகள் வெளியிடப்பட்டன. எனினும், இதனை இந்தி திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் வழக்கறிஞர் மறுத்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில், திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் ஆகியோருக்கு எதிராக பீகாரின் பெகுசராய் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட் ஒன்றில் கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது போன்ற செய்திகள் வெளிவந்தன.

ஆனால், புகார் கூறிய தனிநபர் ஒருவரின் வழக்கறிஞர் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த செய்திகள் வெளிவந்திருக்க கூடும். இவை பொய்யானது மற்றும் சரியானதல்ல. ஏனெனில் கைது வாரண்ட் எதனையும் ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூர் பெறவில்லை என தெரிவித்து உள்ளார்.

2020-ம் ஆண்டில் வெளியான எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். சீசன் 2 தொடரானது, ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என அப்போது நெட்டிசன்கள் பலரது சார்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டன.

டுவிட்டரில், ஆல்ட்பாலாஜி ராணுவத்தினரை புண்படுத்தி விட்டார் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங் ஆனது. சீசன் 2-ல் வெளியான எபிசோடு ஒன்றில், ராணுவ வீரர் பணிக்கு சென்று விட்ட பின்னர், அவரது மனைவி வேறொருவருடன் கள்ளக்காதலில் ஈடுபடும் காட்சியமைப்புகள் வெளிவந்தன. இதுபோன்ற பல காட்சிகள் வெளிவந்து சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக 2020-ம் ஆண்டிலேயே புகார் அளிக்கப்பட்டு இருந்தது.


Next Story