இந்திய சினிமாவின் தந்தை


இந்திய சினிமாவின் தந்தை
x

இன்று (பிப்ரவரி 16-ந்தேதி) தாதாசாகேப் பால்கே நினைவு நாள். தாதா சாகேப் பால்கே, இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

தாதா சாகேப் பால்கே என்றவுடன் பொதுவாக அனைவருக்கும் சினிமா விருதுதான் நினைவுக்கு வரும். இந்தியாவில் முழு நீள திரைப்படத்தை முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் அவர்.

தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் கலர் படங்கள் இல்லை. அது மட்டும் அல்லாமல் ஒலியும் இல்லாமல் சலன படங்களாகவே இருந்தன. அந்த நேரத்தில் பால்கே தனது தீவிர முயற்சியால் சினிமாவுக்காக ஒரு கதையை எழுதி அதை படமாக எடுத்தார். அவரே 'டைரக்டும்' செய்தார்.

'ராஜா அரிச்சந்திரா' என்ற பெயரில் அந்த படம் 1913-ல் வெளியானது. அந்த படத்தில் நடிக்க நடிகர்-நடிகைகள் யாரும் முன்வராத நிலையில், பால்கே தனது குடும்ப உறுப்பினர்கள் 18 பேரை நடிக்க வைத்து படத்தை வெளியிட செய்தார்.

முதல் இந்திய சினிமா ஒரு குடும்ப படமாகவே அமைந்தது. அதனால் தான் பால்கே இந்திய திரைப்படத் துறையின் தந்தையாக கருதப்படுகிறார். பால்கே உருவாக்கிய கனவுத்தொழிற்சாலை, இன்று 30 லட்சம் திரைத்துறை தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு 20 மொழிகளில் 900-க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகிறது.

பால்கே, 1870-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார்.

ஆர்வம்

சிறு வயதில் இருந்தே கலையார்வமிக்க அவர் திரைப்பட துறையில், சாதனை படைக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு இருந்தார். 1885-ல் மும்பையில் உள்ள ஜெ.ஜெ. கலைக்கல்லூரியில் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் முறையை கற்றார். பிரபல ஓவியர் ரவிவர்மாவிடம் ஓவியம் வரைய கற்றுக்கொண்டார். பின்னர் பல இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்காததால் 'காரல்றெட்ஸ்' என்ற ஜெர்மனி மேஜிக் நிபுணருடன் இணைந்து 'மேஜிக் ஷோ' நடத்தினார்.

உலகம் முழுவதும் திரைப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்தியாவிலும் சினிமா அடி எடுத்து வைத்தது. 1896-ல் ஜூலை 7-ந்தேதி லூமியர் சகோதரர்கள் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் 'கிறிஸ்துவின் வாழ்வு' என்ற முதல் படத்தை மக்களுக்கு போட்டு காட்டினார்கள். அப்போது இந்த படம் குறித்து பத்திரிகையில் பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்டது.

'நூற்றாண்டின் அற்புதம், 'உலகின் அதிசயம்', இயற்கை வடிவ அளவில் உயிருள்ள நிழல் படக்காட்சி, ஒளிப்பதிவின் வரவு, புகை வண்டியின் வருகை, கடலில் குளியல், என விளம்பரங்கள் கொடுத்து அமர்க்களப்படுத்தினர்.

மாலை 6 மணி 7, 9, 10 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டன. நுழைவு கட்டணமாக ரூ.1 வசூலிக்கப்பட்டது. அந்த காலத்தில் பொழுது போக்கு அம்சமாக கூத்து, நாடகம், நடனம், மாயாஜாலம் போன்ற நாட்டுப்புறக்கலைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. சினிமாவின் வரவால் இவை அனைத்தும் ஓரம் தள்ளப்பட்டன.

'கிறிஸ்துவின் வாழ்வு' திரைப்படத்தை பார்த்த பால்கே அதிசயத்தில் உறைந்து போனார். அந்தப்படத்தைப்போல தாமும் படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு துளிர்விட்டது.

திரைப்பட நுணுக்கங்களை கற்றுக்கொள்வதற்காக, சினிமா கொட்டகைகளில் வேலைக்கு சேர்ந்தார். ஓய்வின்றி பல படங்களை பார்த்தார். குறிப்பு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு பல குறிப்புகள் எழுதிக்கொள்வார்.

பார்வை பாதிப்பு

சலன படங்களாக இருந்ததால், படம் பார்ப்பவர்களுக்கு நாடகக்காரர்கள், இசை மேதைகள், அருகில் இருந்து கதையை விளக்கி சொல்வார்கள். ஓய்வின்றி படங்கள் பார்த்ததால் பால்கேவுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. அதை பொருட்படுத்தாமல் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டு சினிமா மீதான மோகத்தால் இங்கிலாந்து சென்றார். அங்குள்ள ஒரு ஸ்டுடியோவில் பணிபுரிந்தார். அங்கு சில காலம் வேலைப்பார்த்த பின்னர் சினிமா நுணுக்கங்களை கற்றுக்கொண்டு இந்தியா திரும்பினார். வரும்போது விலை உயர்ந்த கேமரா ஒன்றை வாங்கி வந்தார்.

அதை வைத்து ஒரு பூந்தொட்டியில் இருந்து செடி வளர்வதை போல் படம்பிடித்து அதை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், போட்டுக்காட்டி மகிழ்ந்தார். பின்னர் என்ன கதையை படம் எடுக்கலாம் என்று நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து ராஜா அரிச்சந்திரா கதையை தேர்வு செய்தார். நடிகர்-நடிகைகளை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

அந்தக்காலத்தில் நாடகமே பிரதானமாக இருந்தது. சினிமா பார்ப்பதையோ, சினிமாவில் நடிப்பதையோ மக்கள் பாவம் என்று கருதினார்கள். இந்த சூழ்நிலையிலும் பால்கே மனம் தளராமல் தன் சொத்துகளை எல்லாம் விற்று படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நடிப்பு பயிற்சி பட்டறை தொடங்கினார். அதில் நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்தார். நடிப்பு பட்டறையில் ஆண்கள் சேர்ந்தார்கள். பெண்கள் ஆர்வம் காட்டவில்லை.

பெண்களை நடிக்க வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பால்கே, பாலியல் தொழிலில் ஈடுபட்ட சில பெண்களிடம் சென்று பேசினார். அவர்களும் ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியாக பால்கே அதிரடியாக முடிவு எடுத்தார். தன் குடும்ப உறுப்பினர்களையே படத்தில் நடிக்க வைப்பது என்று தீர்மானித்து, குடும்பத்தில் உள்ள 18 பேருக்கும் நடிப்பு சொல்லிக்கொடுத்தார்.

பெண் வேடம்

பெண் வேடத்துக்கு ஆண்களையே பயன்படுத்தினார். படக்காட்சிகள் தத்ரூபமாக அமையவும், பெண்களுக்கு உரிய நளினத்தை வரவழைக்கவும் பெண் வேடம் பூண்டவர்களை எந்த நேரமும் சேலை கட்டியே நடமாட விட்டார். நாள் முழுவதும் வீட்டு வேலை, சமையல் வேலைகளை செய்யவைத்ததோடு, அவர்களை கூந்தல் வளர்க்கவும் உத்தரவிட்டார். அனைத்துக்கும் ஒருபடி மேலே சென்று பெயரைக் கூட மாற்றிக் கொள்ளும் படியும் கூறினார். அதன் பிறகு பட வேலைகளை தொடங்கினார்.

படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம், காஸ்டியூம், வினியோகம், உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் பால்கேவே கவனித்தார். அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பதைப்போல 'ட்ராலி ஷாட்' போன்ற நவீன வசதி மிக்க கேமராக்கள் கிடையாது. கேமரா ஒரே இடத்தில்தான் இருக்கும். நடிகர்கள்தான் கேமரா முன் வந்து ஒளிப்பதிவுக்கு ஏற்றபடி நடித்து விட்டு செல்ல வேண்டும்.

ஒரு வழியாக பல தடைகளையும் சிரமங்களையும் தாண்டி ராஜா அரிச்சந்திரா படம் 1913-ல் வெளியாகி மக்களின் ஏகோபித்த பாராட்டுதலை பெற்றது. இந்தப்படத்தை 7 மாதம் 21 நாளில் அவர் தயாரித்து முடித்தார்.

இந்த காலக்கட்டத்தில் உலகெங்கும் சினிமா பிரபலமடைய தொடங்கின. பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி திரைப்பட நிறுவனங்கள் இந்தியாவில் இடம் பிடிக்க போட்டிப்போட்டன. அதை பால்கே முறியடித்து முதல் சினிமாவை அறிமுகப்படுத்தி இந்திய சினிமாவின் தலைவிதியை நிர்ணயித்து விட்டார்.

பின்னர் பால்கே இந்துஸ்தான் கம்பெனி என்ற பெயரில் ஒரு கம்பெனியை தொடங்கி அதன் மூலம் மோகினி பத்மாசுர், 'பர்த் ஆப் கிருஷ்ணா' உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட படங்களையும் 25 குறும்படங்களையும் உருவாக்கினார். அத்தனை படங்களையும் அவரே இயக்கவும் செய்தார். 1940 காலக்கட்டத்தில், பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியதும், பால்கேவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வறுமையில் வாடிய அவர் மனைவியின் நகை மற்றும் சொத்துகளை அடமானம் வைத்து குடும்பம் நடத்தினார். 1974 பிப்ரவரி 16-ல் தனது 74 வது வயதில் நாசிக்கில் காலமானார்.

வாழ்நாள் சாதனை விருது

1910 முதல் 1940 வரை திரைப்பட துறையின் பால்கேயின் பங்களிப்பை பாராட்டும் விதமாக இந்திய அரசு பால்கேயின் நூறாவது பிறந்த நாளான 1969 முதல் தாதாசாகேப் பால்கே விருதினை இந்திய திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த விருது, தங்கத்தாமரை, சான்றிதழ், ரூ.10 லட்சம் ரொக்க பரிசை உள்ளடக்கியதாகும்.

இந்திய திரை உலகினருக்கு கிடைக்கும் கவுரவ விருதாகவும் வாழ்நாள் அங்கீகாரமுமாக இந்த விருது கருதப்படுகிறது. சினிமா உலகின் உச்சபட்ச விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்தியாவில் ஆஸ்கார் விருதுக்கு சமமானதாக கருதப்படுகிறது.

நடிகர், டைரக்டர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று அனைத்து தரப்பினரும் இந்த விருதை பெறுவதை லட்சியமாக கொண்டுள்ளனர். குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது அடுத்த ஆண்டு இந்திய தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படுகிறது. இந்த விருதை முதலில் 1969-ம் ஆண்டு நடிகை தேவிகா ராணி பெற்றார்.

நாகிரெட்டி (தயாரிப்பாளர்), எல்.வி.பிரசாத் (டைரக்டர்), ராஜ்கபூர் (நடிகர் இயக்குனர்), நாகேஸ்வர ராவ் (நடிகர்), ராஜ்குமார் (நடிகர்), லதா மங்கேஷ்கர்( பின்னணி பாடகி), அமிதாப்பச்சன் (நடிகர்) ஆகியோர் பெற்றிருந்தாலும், தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், டைரக்டர் பாலச்சந்தர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்று தமிழ் திரை உலகுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


Next Story