எத்தனை முறை நான் செய்வது...? ரசிகரின் கேள்வியால் கோபப்பட்ட இந்தியன் 2 பட நடிகை

ரசிகர் ஒருவர் ஆர்வத்தில், திருமணம் பற்றிய உங்களுடைய திட்டம் என்ன? எப்போது உங்களுக்கு திருமணம் நடக்கும்? என கேட்டார்.
புனே,
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபல நடிகையானவர் ரகுல் பிரீத் சிங். தமிழில் தடையற தாக்க மூலம் அறிமுகம் ஆன இவர், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே., அயலான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை ரகுல் பிரீத் சிங், திரைப்பட தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரியில், கோவாவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களுடைய திருமணத்தில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு பின்னர், அதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் என்னிடம் எதுபற்றி வேண்டுமென்றாலும் கேளுங்கள் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை அவர் நடத்தினார்.
இதில், ரகுலின் ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அவரும் சளைக்காமல் அதற்கு தனது பாணியில் பதில்களை வழங்கினார்.
இந்நிலையில், ரகுலுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்வி முறை வந்தது. அப்போது ஒரு ரசிகர் ஆர்வத்தில், திருமணம் பற்றிய உங்களுடைய திட்டம் என்ன? எப்போது உங்களுக்கு திருமணம் நடக்கும்? என கேட்டார்.
இதனை கேட்டு ஆச்சரியமடைந்த ரகுல், அது முன்பே நடந்து விட்டது. என்னை எத்தனை முறை அதனை செய்ய வைப்பீர்கள்? என்று சற்று ஆவேசத்துடன் கேட்டார்.
அதனுடன், ஜாக்கியுடன் ஒன்றாக இருக்கும் திருமண புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்து உள்ளார். இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் இவர் நடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.