'மத உணர்வை புண்படுத்திவிட்டார்' புதிய பாடல் வெளியிட்ட 'சிங்கம்' இசையமைப்பாளர் மீது வழக்கு


மத உணர்வை புண்படுத்திவிட்டார் புதிய பாடல் வெளியிட்ட சிங்கம் இசையமைப்பாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Nov 2022 8:01 AM IST (Updated: 5 Nov 2022 10:17 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் புதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பாடலின் வரிகள் மத உணர்வை புண்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து 2010-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் சிங்கம். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் (டிஎஸ்பி) இசையமைத்திருந்தார்.

இதனிடையே, தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு உள்பட பல்வேறு மொழி படங்களில் இசையமைப்பு, பாடல்களை பாடியும் வருகிறார். அதேவேளை, சொந்தமாக பாடல்களை எழுதி, பாடி, இசையமைத்து யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார்.

இதனிடையே, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் 'ஓ பரி' என்ற பாடலை பாடி, இசையமைத்துள்ளார். அந்த பாடலை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ள நிலையில் அதை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் பாடி, இசையமைத்துள்ள 'ஓ பரி' பாடல் இந்து மத உணர்வை புண்படுத்திவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிகினி உடையில் பெண்கள் பாடும்போது பாடலில் 'ராமா ஹரே ராமா... கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே...' என வரிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அது இந்து மத மக்களின் உணர்வை புண்படுத்துவதாக ஐதராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை கராத்தே கல்யாணி ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story