அந்தரங்க வீடியோவை கசிய விடுவேன்; கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சாவுக்கு மிரட்டல்


அந்தரங்க வீடியோவை கசிய விடுவேன்; கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சாவுக்கு மிரட்டல்
x

அந்தரங்க வீடியோவை கசிய விடுவேன் என கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப்புக்கு மிரட்டல் கடிதம் வந்து உள்ளது.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். பிரபல நடிகரான இவருக்கு, அதிரடியான மற்றும் தனித்தன்மையான நடிப்பு ஆகியவற்றுக்காகவே ரசிகர்கள் வட்டாரம் அதிகம் உள்ளது.

இந்நிலையில், அவருக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்து உள்ளது. அதனை அனுப்பிய நபர், கிச்சா சுதீப்பின் அந்தரங்க வீடியோவை கசிய விடுவேன் என அந்த கடிதத்தில் மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி சுதீப் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சுதீப் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, எனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதனை யார் எனக்கு அனுப்பி இருக்கிறார் என எனக்கு தெரியும். யாரிடமிருந்து வந்திருக்கிறது என்றும் தெரியும்.

அது திரையுலகில் உள்ள சிலராலேயே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக அவர்களுக்கு நான் சரியான பதிலடி தருவேன். கடினம் வாய்ந்த தருணங்களில் எனக்கு துணையாக இருந்தவர்களுக்கு ஆதரவாக நான் பணியாற்றுவேன் என கூறியுள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படம் விக்ராந்த் ரோனா. சாகசம் மற்றும் திரில்லிங் காட்சிகள் நிறைந்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், வசூலையும் குவித்து உள்ளது. நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை இன்று நேரில் சந்தித்து பேசினார்.

அவர் பெங்களூரு விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்வேன் என்றும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.


Next Story