தோல்வியால் துவண்டு போனாரா அமீர்கான்?


தோல்வியால் துவண்டு போனாரா அமீர்கான்?
x

பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களையும், வித்தியாசமான நடிப்பையும் வழங்கியபடி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத் துறையில் இருந்து பிரகாசித்து வருபவா், அமீர்கான்.

'யாேதான் கி பாரத்' சினிமா மூலம் பாலிவுட்டில் நுழைந்த அமீர்கான், 1988-ம் ஆண்டு வெளியான 'கியாமத் சே கியாமத் தக்' படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்தார். வெற்றிப்படமாக அமைந்த அந்த படத்தின் வாயிலாக, பாலிவுட் ரசிகர்கள் அமீர்கானை ஒரு நடிகராக ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து 'லகான்', 'ரங்க் தே பசந்தி', 'கஜினி', '3 இடியட்ஸ்', 'தூம் 3', 'பி.கே.', 'தங்கல்' போன்ற படங்கள் அமீர்கான் நடிப்பில் உச்சம் தொட்ட படங்களாக பார்க்கப்படுகின்றன. இதில் 'பி.கே.' படம், பாலிவுட்டில் முதன் முறையாக ரூ.800 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த படம் என்ற சிறப்புக்குரியது.

அப்படிப்பட்டவருக்கு கடந்த 5 வருடம் சோதனைக் காலமாக அமைந்து விட்டது. இந்த 5 வருட இடைவெளியில், அவரது நடிப்பில் 3 படங்கள் மட்டுமே வந்திருந்தாலும், அவை மிகப்பெரிய தோல்வியை சந்தித்து விட்டன. ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த, 'தங்கல்' படத்திற்குப் பிறகு, அமீர்கான் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான படம் 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்'. அதற்கு அடுத்த ஆண்டு 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' என்ற வரலாற்று படம் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில் கொரோனோ தொற்றுப் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அமீர்கான் நடிப்பில் வெளியான படம்தான் 'லால் சிங் சத்தா'. 1994-ம் ஆண்டு வெளியாகி 6 பிரிவுகளில் ஆஸ்கார் விருதை வென்ற ஹாலிவுட் படம் 'பாரஸ்ட் கம்ப்.' இந்தப் படத்தைத்தான் சிறிய மாற்றங்களுடன், ரீமேக் செய்து 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் எடுத்திருந்தார், அமீர்கான்.

இந்தப் படத்தில் அமீர்கானின் நடிப்பு வரவேற்கும்படி இருந்தாலும், படம் படுதோல்வியை சந்தித்தது. கடந்த 13 ஆண்டுகளில் அமீர்கான் படத்திற்கு இப்படியொரு மோசமான ஓபனிங் இல்லை என்ற ரீதியில், இந்தப் படத்தின் வசூல் இருந்தது. அமீர்கானின் படங்கள் பொதுவாக வெளியான முதல் நாளிலேயே ரூ.80 கோடியை தாண்டி வசூலித்து விடும். அதிலும் பான் இந்தியா படமாக வெளியிடப்பட்ட 'லால் சிங் சத்தா', 10 நாட்களாகியும் ரூ.70 கோடியைக் கூட தொடாதது மோசமான வசூல் சாதனையாக அமைந்து விட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் அமீர்கான் இருந்த காரணத்தால் கடுமையான விளைவுகளை சந்தித்தார். பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திரும்பிக் கொடுக்கும் சூழ்நிலையும் உருவானது.

இது அவருக்கு மன உளைச்சலை அளித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் கூட, அவர் 'சாம்பியன்ஸ்' என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் படத்தில் தான் நடிக்கப் போவதில்லை என்றும், சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்திருப்பது, அவரது ரசிகர்களை மிகவும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது.

சமீபத்தில் பேட்டியளித்த அமீர்கான், "நான் சாம்பியன்ஸ் என்ற படத்தில் நடிக்க இருந்தேன். தற்போது அந்தப் படத்தை சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளேன். ஆனால் கதாநாயகனாக வேறு ஒருவர் நடிப்பார். கடந்த 35 வருடங்களாக சினிமாவுக்காக ஓடிக்கொண்டிருக்கிறேன். இப்போது என் குடும்பத்திற்காக நேரம் செலவழிக்க விரும்புகிறேன். அதற்கு இது சரியான நேரம் என்றும் கருதுகிறேன். அதனால் சினிமாவிற்கு சில காலம் ஓய்வு அளிக்கப்போகிேறன்" என்று கூறியிருக்கிறார்.

ஒரு நடிகனுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிதான் வரும். அதை கடந்த 30 ஆண்டுகளில் அமீர்கான் அதிகமாகவே பார்த்திருப்பார். இருந்தாலும், 'லால் சிங் சத்தா' படத்தின் தோல்வி என்பது, ரசிகர்களால் ஏற்பட்டது அல்ல.. சமூக வலைத்தளங்களில் படம் பற்றி வெளிவந்த சில தவறான கருத்துக்களே என்பதுதான் அமீர்கானின் மன உளைச்சலுக்கு காரணமாக இருக்க முடியும். அதில் இருந்து அவர் புதிய உத்வேகத்துடன் மீண்டுவர இந்த ஓய்வு அவருக்கு தேவையானதாக இருக்கலாம். மீண்டும் ஒரு வித்தியாசமான, ரசிக்க வைக்கும் கதாபாத்திரத்துடன் அவர் ரசிகர்களை சந்திக்க விரைவில் வருவார் என்று எதிர்பார்ப்போம்.


Next Story