தீபாவளிக்கு மோதும் அஜித், கார்த்தி படங்கள்


தீபாவளிக்கு மோதும் அஜித், கார்த்தி படங்கள்
x

தீபாவளியையொட்டி அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 61 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படமும் தீபாவளியையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையில் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்று இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொதுவாக பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே தீபாவளி பண்டிகையில் திரைக்கு வரும். அஜித்குமார் நடித்து வரும் அவரது 61-வது படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இதில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் வில்லன் வேடம் என்றும் தகவல் பரவி வருகிறது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நீண்ட தாடியுடன் அஜித் நடிப்பதாக புதிய தோற்றம் வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையில் கார்த்தியின் சர்தார் படமும் வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளனர். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தயாராகி உள்ள 'சர்தார்' படத்திலும் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். ஒரு கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் வருகிறார். நாயகிகளாக ராஷி கன்னா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கார்த்தி நடித்துள்ள 'விருமன்' படம் ஆகஸ்டு மாதமும், பொன்னியின் செல்வன் செப்டம்பர் மாதமும் திரைக்கு வருகிறது. கார்த்தியின் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story