'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் தயாரிப்பாளருக்கு பிடி வாரண்ட்

நடிகர் அரவிந்த் சாமிக்கு 35 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பான வழக்கில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அரவிந்த் சாமி 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் முருகன் குமார் சம்பளமாக 3 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால், படம் முடிந்த பின்னர் நடிகர் அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கியாக 30 லட்சம் ரூபாயும், டிடிஎஸ் தொகை 27 லட்சமும் வருமான வரித்துறைக்கு செலுத்தப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் படத்தை வெளியிடுவதற்கு முன் தயாரிப்பாளர் மீண்டும் அரவிந்த் சாமியிடம் 35 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். அந்தத் தொகையையும் திருப்பிச் செலுத்தாததால் வட்டியுடன் நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிடக்கோரி 2018-ல் சிவில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019-ம் ஆண்டில் அரவிந்த் சாமிக்கு தர வேண்டிய பணத்தை 18 சதவீத வட்டியுடன் 65 லட்சம் ரூபாயாக வழங்கவும், டிடிஎஸ் தொகை 27 லட்சம் ரூபாயை செலுத்தவும் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி சம்பள பாக்கியும், டிடிஎஸ் தொகையும் செலுத்தவில்லை என்பதால் 2020-ம் ஆண்டு மீண்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தயாரிப்பாளர் முருகன் குமார் தனது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று (ஜூன் 17) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததால், பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். அப்போது தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தயாரிப்பாளரிடம் சொத்துக்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து சொத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில், கைது நடவடிக்கையை தவிர்க்க தயாரிப்பாளர் தன்னை திவாலானதாக அறிவிக்கலாம் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சொத்து விவரம் தொடர்பான மனு மீதான விசாரணை ஜூலை 8-ம் தேதி நடத்தப்படும் என கோர்ட்டு தெரிவித்துள்ளது.






