எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்
படங்களை ஒப்பிட்டு பேசுவதும், நாவல்களை படமாக எடுப்பதும் இன்று நேற்றல்ல, காலம் காலமாகவே இருந்து வருகிறது.
1980 நவம்பர் 6-ந் தேதி வெளியான பாரதிராஜாவின் நிழல்கள் படமும், பாலசந்தரின் வறுமையின் நிறம் சிவப்பு படமும் வேலையில்லா திண்டாட்டத்தை கதைக்கருவாக கொண்டவை. இதனால் அப்போது இரு படங்களும், ஒப்பிட்டு பரபரப்பாக பேசப்பட்டது.
1948-ல் வெளியான தமிழின் முதல் பிரமாண்ட படைப்பான ஜெமினியின் 'சந்திரலேகா', ஜார்ஜ் வி.எம்.ரெனால்ட் என்பவர் எழுதிய ராபர்ட் மக்கேய்ர் என்ற நாவலின் ஒரு பகுதியை தழுவி எடுக்கப்பட்டதாகும்.
பிரபல நாவலாசிரியர் அலெக்சாண்டர் டூமாஸ் 1884-ல் எழுதிய கார்காசியன் பிரதர்ஸ் என்ற நாவலை தழுவி 1949-ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் 'அபூர்வ சகோதரர்கள்'. ஜெமினி பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆச்சார்யா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் எம்.கே.ராதா, பானுமதி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
இதே கதைதான் பின்னர் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில் 'நீரும் நெருப்பும்' என்ற பெயரில் 1971-ல் வெளியானது. ஒட்டிப்பிறந்த இரு சகோதரர்களை பற்றிய இந்த கதையில் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து இருந்தார். 'நீரும் நெருப்பும்' வெளியான போது, அதை அபூர்வ சகோதரர்களுடன் ஒப்பிட்டு பரபரப்பாக பேசினார்கள்.
எம்.ஜி.ஆரின் சில படங்கள் தெலுங்கு, இந்தி படங்களின் மறு ஆக்கம் (ரீமேக்) ஆகும். என்.டி.ராமராவ் நடித்த 'ராமுடு பீமுடு' தெலுங்கு படம் 'எங்க வீட்டு பிள்ளை' ஆகவும், இந்தியில் தர்மேந்திரா நடித்த 'பூல் அவுர் பத்தர்' 'ஒளிவிளக்கு' ஆகவும், யாதோங்கி பாரத்' 'நாளை நமதே' ஆகவும் மறு ஆக்கம் செய்யப்பட்டன. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
மாபெரும் வெற்றி பெற்ற 'யாதோங்கி பாரத்' பாடல்களுக்காகவே ஓடிய படம். 'நாளை நமதே'யில் பாடல்கள் எப்படி இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதை விட ஒருபடி மேல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் சாகாவரம் பெற்ற அற்புதமான பாடல்களை தந்து இருந்தார்.
சிவாஜி கணேசனும் 'ராஜா' (இந்தி: ஜானி மேரே நாம்), 'திரிசூலம்' (கன்னடம்: சங்கர் குரு) உள்ளிட்ட பல ரீமேக் படங்களில் நடித்து உள்ளார். கேசவதேவ் எழுதிய 'ஓடையில் நின்னு' என்ற மலையாள நாவல் அதே பெயரில் மலையாளத்தில் படமாக எடுக்கப்பட்டு, பின்னர் தமிழில் சிவாஜி நடிப்பில் 'பாபு' என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டு 1971-ல் வெளியானது.
கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவல்தான் 1968-ல் அதே பெயலில் சிவாஜிகணேசன்-பத்மினி நடிப்பில் படமாக எடுக்கப்பட்டு வரலாற்று சாதனை படைத்தது. தஞ்சை மண்ணின் நாதஸ்வர இசை, நாட்டிய கலாசார பெருமையை சொல்லும் 'தில்லானா மோகனாம்பாள்' படத்தின் சில காட்சிகள், கதை நடந்ததாக நாவலில் சொல்லப்படும் தஞ்சை, திருவாரூர், மதுரை ஆகிய இடங்களுக்கே சென்று படமாக்கப்பட்டன.
இதேபோல், உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவல், 1978-ல் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'முள்ளும் மலரும்' என்ற பெயரில் வெளியாகி சக்கைபோடு போட்டது. நாவலில் இடம்பெற்ற அம்சங்கள் படத்தில் நன்றாக படமாக்கப்பட்டு இருந்தன. இந்த படம் ரஜினியின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
ரஜினியின் மற்றொரு வெற்றிப்படமான, 1978-ல் வெளியான 'பிரியா', பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவலை தழுவி எடுக்கப்பட்டது.
தெலுங்கில் நாகேஸ்வரராவ், ஸ்ரீதேவி, ஜெயசுதா நடித்த 'பிரேமாபிஷேகம்'தான், தமிழில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா நடிப்பில் 'வாழ்வே மாயம்' ஆனது.
ரஜினிகாந்த் நடிப்பில் 1980-ல் வெளியாகி வெற்றி பெற்ற பில்லா, 2007-ல் அஜித்குமார் நடிப்பில் அதே பெயரில் மீண்டும் வெளியான போது இரு படங்களும் ஒப்பிட்டு பேசப்பட்டன. அஜித்தின் பில்லாவும் வசூலை வாரி குவித்தது. 2012-ல் அஜித் நடிப்பில் பில்லா-2வும் வெளியானது.
படங்களை மறுஆக்கம் செய்யும் போது அந்தந்த மாநில கலாசாரம், பண்பாடு, பேச்சு வழக்குக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்படுவது உண்டு.
முன்பெல்லாம் இப்படி ரீமேக் மற்றும் நாவல்களை தழுவிய படங்கள் வெளியாகும் போது ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு பேசுவார்களே தவிர, கடுமையாக விமர்சிக்க மாட்டார்கள். அப்போது அதற்கான தளங்களும் குறைவு. ஆனால் இப்போது காட்சி ஊடகம், சமூக ஊடகம் என்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதற்காக விமர்சனம், ஒப்பீடு என்ற பெயரில், படைப்பாளிகளை கல்லெறிந்து காயப்படுத்துவது நியாயமாகுமா?
திருவிளையாடலில் நம்ம தருமி சொன்னது போல், கவிதை எழுதி பெயர் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். சிலர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குகிறார்கள்.
"ஒரு துறையில் வெற்றி பெற்றவன் சாதனையாளன் ஆகிறான்; தோல்வி அடைந்தவன் விமர்சகன் ஆகிறான்" என்ற பொன்மொழிதான் நிறைவுக்கு வருகிறது.
கல்கியின் அர்ப்பணிப்பு
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், 1950 முதல் 1954-ம் ஆண்டு வரை 'கல்கி' வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. 5 பாகங்களை கொண்ட இந்த சரித்திர கதை, அதற்கு அடுத்த ஆண்டில் 2,210 பக்கங்களை கொண்ட புத்தகமாக வெளியிடப்பட்டது.
பொன்னியின் செல்வன் என அழைக்கப்படும் சோழ இளவரசன் அருள்மொழிவர்மனின் இளமைக்கால வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது இந்த நாவல். அருள்மொழிவர்மன்தான் பின்னர் ராஜராஜசோழன் என அழைக்கப்பட்டார். இவர்தான், தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாகவும், பொக்கிஷமாகவும் விளங்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டினார்.
பொன்னியின் செல்வன் நாவலின் கதைக்களம் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காகவும், அந்த இடங்களை நேரில் பார்ப்பதற்காகவும் கல்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளார். இலங்கைக்கு மூன்று முறை போய் இருக்கிறார். அந்த நாவல் தொடர்பான வரலாற்று ஆதாரங்களை திரட்டவும், உண்மையான தகவல்களை கண்டறியவும் பல புத்தகங்களை தேடி சேகரித்து படித்து இருக்கிறார்.
இதேபோல் 'சிவகாமியின் சபதம்' நாவலை எழுதுவதற்காக மராட்டியத்தில் குகைக் கோவில்கள் அமைந்துள்ள அஜந்தா, எல்லோராவுக்கு சென்று வந்துள்ளார்.
இந்த பயணங்களின் போது, தனது கதைகளுக்கு தத்ரூபமாக ஓவியங்களை வரையும் ஓவியர் மணியம் செல்வத்தையும் கல்கி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். தனது படைப்புகள் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக அவர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.