மிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 'டிமான்டி காலனி 2' படக்குழு சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி


மிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டிமான்டி காலனி 2 படக்குழு சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி
x

புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். அதன்படி, அனைத்து திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

அதேபோல, பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் 'டிமான்டி காலனி 2' படக்குழு சார்பில் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் படக்குழுவினர் வழங்கினர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் உருவான பாதிப்புகளை துடைத்தெறியும் பணியில் கழக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. கழக அரசின் இப்பணிகளுக்கு பலரும் பங்களிப்பும் செய்து வருகின்றனர்.

அந்தப் பணிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், 'டிமான்டி காலனி 2' திரைப்படக்குழுவின் சார்பில் அப்படத்தின் கதாநாயகனான தம்பி அருள்நிதி, தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன், இயக்குனர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து ரூ.15 லட்சத்திற்கான காசோலையை 'முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு இன்று நம்மிடம் வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்" என்று தெரிவித்து உள்ளார்.



Next Story