கலக்கும் மூத்த நடிகைகள்


கலக்கும் மூத்த நடிகைகள்
x

மூத்த நடிகைகளின் படங்கள் வசூல் சக்கைபோடு போடுகிறது.

சினிமாத் துறையில் வயதான நடிகர்கள் தொடர்ந்து கதாநாயகர் களாக நடிப்பதும், 30 வயதை தாண்டிய நடிகைகளை 'கதாநாயகிக்கு லாயக்கு இல்லை' என்று அம்மா, அண்ணி கதாபாத்திரங்களுக்கு இறக்கி விடுவதும் வழக்கம். மூத்த நடிகர்கள் இளம் நடிகைகளை ஜோடியாக்கி அவர்களுடன் டூயட் பாடுவதும், முன்னாள் கதாநாயகிகளை எரிச்சல் படுத்தின. இந்த கோபத்தை பல நேரங்களில் அவர்கள் வெளிப்படுத்தியும் உள்ளனர். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி இருக்கிறது. 30 மற்றும் 40 வயதை தாண்டிய நடிகைகளும், கதாநாயகர்களுக்கு இணையாக தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தனித்துவம் காட்டி நடிக்கத் தொடங்கி உள்ளனர்.

இந்தப் பட்டியலில் ஜோதிகா, நயன்தாரா, திரிஷா, மஞ்சு வாரியர், ஐஸ்வர்யாராய், அனுஷ்கா, சமந்தா, அமலாபால் என்று பெயர்கள் நீள்கிறது. இந்த மூத்த நடிகைகளின் படங்கள் வசூலிலும் சக்கைபோடு போடுகிறது. ஜோதிகாவுக்கு 44 வயது ஆகிறது. அவரை முதன்மைப்படுத்தி வந்த 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே போன்ற படங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது மலையாள படமொன்றில் மம்முட்டியோடு நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நயன்தாராவுக்கு 37 வயது. இன்னும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அவரை இளம் கதாநாயகிகளால் கூட அசைக்க முடியவில்லை. இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் 'கனெக்ட்', மலையாளத்தில் பிரிதிவிராஜுடன் 'கோல்டு', இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக 'ஜவான்' ஆகிய படங்களில் நடிக்கிறார்.

46 வயதை எட்டிய மீனா, 'திரிஷ்யம்' படங்களுக்குப் பிறகு, தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வருகிறார். ஒரு தமிழ் படமும் கைவசம் உள்ளது. 39 வயதாகும் திரிஷா 'பொன்னியின் செல்வன்' படத்தில் கலக்கினார். 'த ரோடு', மலையாளத்தில் 'ராம்' படங்கள் கைவசம் உள்ளன. விஜய், அஜித்தின் புதிய படங்களில் நாயகியாக நடிக்கவும் திரிஷாவிடம் பேசி வருகிறார்கள்.

தனுஷ் ஜோடியாக 'அசுரன்' படத்தில் நடித்த 44 வயதாகும் மஞ்சுவாரியர், இப்போது 'துணிவு' படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஐஸ்வர்யாராய் 'பொன்னியின் செல்வன்' படத்தில் மிரட்டினார். இந்தியிலும் கலக்குகிறார். 40 வயதை தொட்டுள்ள அனுஷ்கா தெலுங்கில் நவீன் போலிஷெட்டியுடன் புதிய படத்தில் நடிக்கிறார். திருமணமாகி விவாகரத்து ஆன 35 வயது சமந்தா, சாகுந்தலம், யசோதா, குஷி என்று படங்களில் தொடர்ந்து பிஸியாகவே இருக்கிறார். தமன்னா 32 வயது ஆன நிலையிலும் கைநிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறார். திருமணமாகி விவாகரத்து பெற்ற 31 வயது அமலாபால் 5 படங்களில் நடித்து வருகிறார்.


Next Story